புதிய இன்ஜின்கள் வருவதில் தாமதம் 'அம்ரித் பாரத்' ரயில் தயாரிப்பில் சுணக்கம்
புதிய இன்ஜின்கள் வருவதில் தாமதம் 'அம்ரித் பாரத்' ரயில் தயாரிப்பில் சுணக்கம்
ADDED : ஏப் 11, 2024 08:45 PM
சென்னை:'அம்ரித் பாரத்' ரயில்களுக்கான புதிய இன்ஜின்கள் வருவதில் தாமதம் ஏற்படுவதால், ரயில் தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயிலை தொடர்ந்து, அம்ரித் பாரத் ரயில் சென்னை ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்பட்டது. வந்தே பாரத்துக்கு இணையான வேகமும், பாதுகாப்பும் உடைய அம்ரித் பாரத் ரயில், 'புஸ் புல்' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலின் இருபுறமும் இன்ஜின் கொண்டு இயக்கப்படுவதால், வந்தே பாரத்துக்கு இணையாக மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் செல்லும். ஒரே நேரத்தில் 1,834 பேர் பயணிக்கும் வகையில், 12 முன்பதிவு பெட்டிகள் உட்பட 22 எல்.எச்.பி., பெட்டிகள் இருக்கும்.
தற்போது, பீஹார் தர்பங்கா - உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி தாம் வழியாக ஆனந்த் விஹாருக்கும், மேற்கு வங்க மாநிலம் மால்டா - பெங்களூருக்கும் இடையே கடந்த டிசம்பர் முதல் இந்த வகையில் ரயில் இயக்கப்படுகிறது.
'சிசிடிவி' கேமரா, பயணியர் தகவல் தொடர்பு அமைப்பு, புதுமையான வெளிப்புற தோற்றம், நவீன ஓட்டுனர் அறை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த ரயில் கொண்டுள்ளது.
இருப்பினும், இந்த ரயில்களுக்கான இன்ஜின்கள், மேற்கு வங்க மாநிலம் சித்தரஞ்சன் ரயில் தொழிற்சாலையில் தயாரித்து தரப்படுகின்றன. இதுவரை, இரண்டு அம்ரித் பாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
புதிய இன்ஜின்கள் வருவதில் தாமதம் ஏற்படுவதால், அம்ரித்பாரத் ரயில் தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அம்ரித் பாரத் ரயில் பெட்டி தயாரிப்பில் எந்த தாமதமும் இல்லை. ஆனால், புதிய ரயில் இன்ஜின் வருவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.
'மற்ற ரயில்களுக்கு இருப்பது போல, ஒரே ரயில் இன்ஜின் மட்டும் போதாது. பழைய இன்ஜின்களையும் இணைத்து இயக்க முடியாது.
'அம்ரித் பாரத் ரயிலில் ஒரே நேரத்தில் இரண்டு இன்ஜின்களை இணைக்க வேண்டும். தற்போது, இதற்கான பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. எனவே, புதிய இன்ஜின்கள் வந்தவுடன், அம்ரித் பாரத் ரயில்கள் அதிகளவில் தயாரிக்கப்படும்' என்றனர்.

