1.10 லட்சம் வீடுகள் கட்டுவது தாமதம்: மானியம் கிடைக்காமல் மக்கள் தவிப்பு
1.10 லட்சம் வீடுகள் கட்டுவது தாமதம்: மானியம் கிடைக்காமல் மக்கள் தவிப்பு
ADDED : மே 07, 2024 05:02 AM
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் நிலம் வைத்திருக்கும் ஏழைகளுக்கு, 1.10 லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் தாமதமாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மத்திய அரசு சார்பில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், ஏழை மக்கள் தங்கள் நிலத்தில் வீடு கட்டுவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
இதில், ஏழை மக்கள் தங்கள் நிலத்தில் வீடு கட்ட, 2.10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இதற்கான செலவை பகிர்ந்து கொள்கின்றன.
தமிழகத்தில், 2023 - 24ம் நிதியாண்டில், பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை மக்களுக்கு, 1.10 லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
இதில், சொந்தமாக நிலம் வைத்துள்ள மக்கள் வீடு கட்டிக்கொள்ள தலா, 2.10 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நிதியாண்டு முடிந்த நிலையில், இத்திட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு மானியம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ஏழை மக்களுக்காக, 1.10 லட்சம் வீடுகள் கட்ட தலா, 2.10 லட்சம் மானியத்தொகை வழங்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
தேர்தல் மற்றும் மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் இப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மானியம் பெறுவதற்கான பயனாளிகள், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதற்கான முகாம்கள் நடத்தப்பட்டு, தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து வருகிறோம்.
அடுத்த சில மாதங்களில், இப்பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.