ADDED : ஆக 07, 2024 10:43 PM
சென்னை:டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வென்றவர்களுக்கு, நான்கு மாதங்களாக பணி நியமன ஆணை வழங்காமல் தாமதம் செய்யப்படுவதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அரசு பணியாளர் தேர்வாணையமான- டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு, 49 இளநிலை பொறியாளர்கள், 49 இளநிலை வரைவு அலுவலர்கள் என, 98 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், 120 நாட்களுக்கு மேலாகியும், அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள இந்த தாமதம், கடும் கண்டனத்திற்குரியது.
பணி நியமன ஆணை கிடைக்காததால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணி ஆணைகள், முறைகேடாக வேறு எவருக்கேனும் வழங்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும், அவர்களை வாட்டுகிறது. தமிழக இளைஞர்களுக்கு அரசு பணி என்பது பெருங்கனவு.
இதை புரிந்து, 98 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.