ADDED : ஜூலை 31, 2024 10:26 PM
சிவகங்கை:தமிழகத்தில், புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 2.08 லட்சம் குடும்பத்தினருக்கு கார்டு வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது.
தமிழகத்தில், புதிதாக திருமணம் முடிப்போர் தனியாக ரேஷன் கார்டு கேட்டும், கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தனியாக ரேஷன் கார்டு கேட்டும் விண்ணப்பித்துள்ளனர்.
மாநில அளவில் புதிய ரேஷன் கார்டு கேட்டு 2.08 லட்சம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளனர். ஏப்., 19 முதல் ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தது.
மாவட்ட வழங்கல் அலுவலர்கள் நேரடி விசாரணை செய்து, அரசுக்கு அறிக்கை வழங்கும் பணி நடைபெறவில்லை. இதன் காரணமாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து பல மாதங்களாகியும் புதிய கார்டு கிடைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
பொது வினியோக திட்ட அதிகாரி கூறியதாவது:
புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 சதவீத விசாரணையை முடித்து விட்டனர்.
வீட்டு வரி, ஆதார் கார்டு எண் உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த ஆவணங்களும் குடும்ப தலைவரின் தனி முகவரியில் இருக்க வேண்டும். இதற்கான ஆதாரங்களை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை வழங்குவோம்.
அதற்கு பின் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான ‛ஸ்மார்ட்' கார்டு தரப்படும். இந்த கார்டை பெற்ற பின்னரே, மகளிர் உரிமை தொகைக்கு புதிய ரேஷன் கார்டு பெற்ற மகளிர் விண்ணப்பிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.