வேளாண் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள்; நிதி ஒதுக்காததால் செயல்பாட்டில் தாமதம்
வேளாண் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள்; நிதி ஒதுக்காததால் செயல்பாட்டில் தாமதம்
ADDED : ஜூலை 21, 2024 06:41 AM

சென்னை : தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. நடப்பாண்டு அறிவித்த பல்வேறு திட்டங்களுக்கு இன்னும் நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்படவில்லை.
குறிப்பாக, 14,000 ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்புகள் அமைக்கும் திட்டத்திற்கு, 42 கோடி ரூபாய்; சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் பயிரிடுவதற்கு விதைகள் வழங்கும் திட்டத்திற்கு, 36 கோடி ரூபாய்; முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' என்ற திட்டத்திற்கு, 206 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்க வேண்டும்.
பருப்பு வகைகள் உற்பத்தி திட்டத்திற்கு, 40 கோடி ரூபாய்; உணவு எண்ணெய் உற்பத்தி திட்டத்திற்கு, 45 கோடி ரூபாய்; எண்ணெய் வித்துகள் சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டத்திற்கு, 108 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கவேண்டும்.
மா உற்பத்தி சிறப்பு திட்டத்திற்கு, 27.4 கோடி ரூபாய்; வாழை பரப்பு விரிவாக்க சிறப்பு திட்டத்திற்கு, 12.7 கோடி ரூபாய;, பலா சாகுபடி சிறப்பு திட்டத்திற்கு, 1.14 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கவேண்டும். இதுமட்டுமின்றி பல சிறிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை. ஜூன் மாதம் முதல், இந்த திட்டங்களை செயல்படுத்தினால், உரிய பலன் கிடைக்கும்.
ஆனால், லோக்சபா தேர்தல் காரணமாக, பிப்., மாதம் முதல் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. வேளாண்துறை நிதி கேட்டு அனுப்பிய பல கோப்புகள், நிதி துறையில் தேங்கி நிற்கின்றன. இதனால், திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால், வேளாண்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

