கனிமங்கள் கடத்தலை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு
கனிமங்கள் கடத்தலை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு
ADDED : மார் 04, 2025 04:19 AM
சென்னை: 'கேரளத்திற்கு எம் சாண்ட், ஜல்லி கடத்தப்படுவதை கண்டித்து, மார்ச் 6 செங்கோட்டையில், அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும்' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை
:தென்காசி மாவட்டத்தில் இருந்து, கல், எம் -சாண்ட், ஜல்லி போன்றவை, பல்லாயிரம் டன் கணக்கில் வெட்டி எடுக்கப்பட்டு, தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில், கேரளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. தமிழகத்தில் இருப்பதை போல், பல மடங்கு கனிம வளங்கள், கேரளத்தில் உள்ளன. அவற்றை அழிய விடாமல் அம்மாநிலம் பாதுகாக்கிறது.
தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள், கேரளா கொண்டு செல்லப்படுவதற்கு, தி.மு.க., அரசு உறுதுணையாக இருந்து, தமிழகத்திற்கு பெரும் துரோகம் செய்து வருகிறது. கேரளாவுக்கு கனிமங்களை ஏற்றி செல்லும், நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், அவதிப்பட்டு வருகின்றனர். விபத்துகளும் ஏற்படுகின்றன.
இது குறித்து புகார் அளித்தும், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து, தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், வரும் 6ம் தேதி காலை 10:00 மணிக்கு, செங்கோட்டை அம்மா உணவகம் அருகில், ஆர்ப்பாட்டம் நடக்கும். இதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாவட்ட செயலர் கிருஷ்ணமுரளி உள்ளிட்டோர் பங்கேற்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.