ADDED : ஆக 24, 2024 01:27 AM

சென்னை:தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், 'ஏடிஸ்' கொசு வகையால் பரவும் டெங்கு காய்ச்சலால், தினமும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இந்தாண்டில் இதுவரை, 7,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும், சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பரவலாக காணப்படுகிறது.
இம்மாவட்டங்களில், ஆங்காங்கே மழை பெய்து வருவதால், நன்னீரில் வளரக்கூடிய, 'ஏடிஸ்' கொசுக்கள் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. தற்பாது தினமும், 30 முதல் 50 பேர் வரை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர். பரவலாக டெங்கு பாதிப்பு இருந்தாலும், உயிரிழப்பு பெரியளவில் இல்லை.
அதேநேரம், கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்டவை இருந்தால், உடனடியாக டாக்டரின் பரிந்துரைப்படி சிகிச்சை பெற வேண்டும். சுய மருத்துவம், உயிருக்கு ஆபத்தாகி விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

