ADDED : ஏப் 24, 2024 08:40 PM
சென்னை:தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான, கல்வி நிறுவனங்களின் தாளாளருக்கு ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் தலைமை மடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார். இவரது உதவியாளர் விருதகிரி என்பவர், மயிலாடுதுறை எஸ்.பி.,க்கு அளித்த புகாரில், 'தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ, ஆடியோ இருப்பதாக, வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டல் விடுத்தனர். அவர்களுக்கு உடந்தையாக, கலைமகள் கல்வி நிறுவன தாளாளர் கொடியரசு இருந்தார்' என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், கல்வி நிறுவனங்களின் தாளாளர் கொடியரசு கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில், கொடியரசு மனு தாக்கல் செய்தார். மனுவில், உடல் நிலையை காரணம் காட்டியிருந்தார். மனு, நீதிபதி தமிழ்செல்வி முன், விசாரணைக்கு வந்தது. ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.

