தேவநாதன் மற்றும் கூட்டாளிகளுக்கு 28 வரை நீதிமன்ற காவல்
தேவநாதன் மற்றும் கூட்டாளிகளுக்கு 28 வரை நீதிமன்ற காவல்
ADDED : ஆக 15, 2024 12:47 AM

சென்னை:'மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்டு' நிறுவன மோசடி வழக்கில், தேவநாதன் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தேவநாதன் உட்பட மூவரையும், வரும் 28 ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க, சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.மலர் வாலன்டினா உத்தரவிட்டார்.
சென்னை, மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில், 150 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்டு நிதி நிறுவனத்தில், 2017ல் இருந்து நிர்வாக இயக்குனராக தேவநாதன், 62, உள்ளார். அதன் இயக்குனர்களாக, சென்னையைச் சேர்ந்த குணசீலன், மகிமைநாதன், சாலமன் மோகன்தாஸ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
அவர்கள், 2021ல் இருந்து, மூத்த குடிமக்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, 10 -12 சவீதம் வரை வட்டி தரப்படும் என, முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளனர். இதன் வாயிலாக, 525 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சென்னை அடையாறு காந்தி நகரைச் சேர்ந்த பிரசாத், 52 உட்பட, 144 முதலீட்டாளர்கள், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். எஸ்.பி., ஜோஸ் தங்கையா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து, நேற்று முன்தினம் தேவநாதனை கைது செய்தனர்.
அவரது கூட்டாளிகளான, நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் குணசீலன், 55, மகிமைநாதன், 52, ஆகியோர், நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் கூறுகையில், 'தேவநாதன் உள்ளிட்ட மூவரிடம் நடத்திய விசாரணையில், 50 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அதில், 24.50 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. மற்றொரு இயக்குனரான சாலமன் மோகன்தாஸ் என்பவரை தேடி வருகிறோம்'என்றனர்.
தேவநாதன், குணசீலன், மகிமை நாதன் ஆகியோர், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரையும் வரும், 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.