ADDED : ஆக 17, 2024 12:15 AM
சென்னை:நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ய தேவநாதனுக்கு உடந்தையாக இருந்த, அவரின் மற்றொரு கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரில் செயல்படும், 'மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்ட்' நிதி நிறுவன தலைவரான தேவநாதன், 62, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, 525 கோடி ரூபாய் வரை மோசடி செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, முதலீட்டாளர்கள் 144 பேர், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
எஸ்.பி., ஜோஸ் தங்கையா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து, தேவநாதன், அவரது கூட்டாளிகளான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
மோசடிக்கு உடந்தையாக இருந்த, தேவநாதனின் மற்றொரு கூட்டாளி சாலமன் மோகன்தாஸ் தலைமறைவாக உள்ளார். அவர் பதுங்கியிருக்கும் இடம் குறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மோசடி தொடர்பாக தேவநாதன் மற்றும் அவரின் கூட்டாளிகளின் வீடுகளில், போலீசார் சோதனை நடத்த உள்ளனர். அவர்களுக்கு இதுவரை கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில், 24.50 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது உறுதியாகி உள்ளது.
போலீசார் கூறுகையில், 'மோசடி தொடர்பாக, தேவநாதன் நடத்தி வரும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருகிறோம்.
'அவரின் வலது கரமாக செயல்பட்ட சாலமன் மோகன்தாஸ் தான், மோசடிக்கான திட்டங்களை தீட்டியுள்ளார். அவர் விரைவில் கைது செய்யப்படுவார். தேவநாதனையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்' என்றனர்.