ADDED : ஆக 21, 2024 09:09 AM
சென்னை : நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தொழில் வர்த்தகர் தேவநாதனின், ஐந்து வங்கி கணக்குகளை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.
சென்னை தி.நகர் தீனதயாளன் தெருவில் வசித்து வரும் தேவநாதன், 62, 'மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்ட்' நிதி நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
கூட்டாளிகளுடன் சேர்ந்து, நிதி நிறுவனத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்த, 525 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, 144 பேர், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
எஸ்.பி., ஜோஸ் தங்கையா தலைமையிலான போலீசார் விசாரித்து, 24.50 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதை உறுதி செய்தனர்.
தேவநாதன், அவரது கூட்டாளிகள் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், அவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை செய்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அவற்றை ஆய்வு செய்து, மோசடிக்கு பயன்படுத்திய, தேவநாதனின் ஐந்து வங்கி கணக்குகளை நேற்று முடக்கி உள்ளனர். அடுத்த கட்டமாக, சொத்துக்களை முடக்கவும் முடிவு செய்துஉள்ளனர்.