கட்டடங்களுக்கான வளர்ச்சி கட்டணம்: ஊராட்சி, நகராட்சிகளிலும் அமலாகுது
கட்டடங்களுக்கான வளர்ச்சி கட்டணம்: ஊராட்சி, நகராட்சிகளிலும் அமலாகுது
ADDED : மார் 25, 2024 06:11 AM
சென்னை : திட்டமில்லா பகுதிகளாக உள்ள ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில், புதிய மனைப்பிரிவு, கட்டுமான திட்டங்களுக்கு, விரைவில் வளர்ச்சி கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில், சென்னைக்கு வெளியில் உள்ள பகுதிகள், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், மாஸ்டர் பிளான் எனப்படும் முழுமை திட்டம் தயாரிப்பது தொடர் நடவடிக்கையாக உள்ளது.
தமிழக அரசு ஒத்துழைப்புடன், கல்வி நிறுவனங்கள் பங்கேற்புடன், முழுமை திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், முறையான முழுமை திட்டம் உள்ள பகுதிகளில் மட்டும்தான், கட்டுமான திட்டங்கள், புதிய மனைப்பிரிவுகள் ஏற்படுத்தும்போது, வளர்ச்சி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த வளர்ச்சி கட்டணங்களை அடிப்படையாக வைத்து தான், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். எனவே, வளர்ச்சி கட்டண வசூல் அவசியமாகிறது.
மாஸ்டர் பிளான் இல்லாத பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகள் வளர்ச்சி கட்டணம் வசூலிப்பது இல்லை.
நகர், ஊரமைப்பு சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு வளர்ச்சி கட்டணம் விதிக்கும் முறையை, உள்ளூர் திட்ட குழும பகுதிகள், திட்டமில்லாத பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்புக்காக, அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
- எஸ்.ராமபிரபு,
தென்னக மைய நிர்வாகி,
இந்திய கட்டுனர்வல்லுனர் சங்கம்.

