சதுரகிரியில் ஆடி அமாவாசை அனுமதிக்கு பக்தர்கள் எதிர்பார்ப்பு
சதுரகிரியில் ஆடி அமாவாசை அனுமதிக்கு பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 29, 2024 12:22 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை(ஆக.,4) அன்று 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வரும் நிலையில், மதியம் 12:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, பக்தர்கள் பாதிக்கப்படும் அபாயமுள்ளது.
எனவே, மலையில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்து அன்று மதியம் 3:00 மணி வரை மலையேற அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள மலைவாச சிவஸ்தலங்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மிகவும் கரடு, முரடான மலைப் பாதையை கொண்ட பகுதி. இங்கு அடிவாரத்தில் இருந்து கோயில் வரை பக்தர்கள் நடந்து செல்ல 6 அடி அகலம் கொண்ட நடைபாதை மட்டுமே உள்ளது. இதன் வழியாக சாதாரண நாட்களில் எதிரும், புதிருமாக சில ஆயிரம் பக்தர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் ஆடி அமாவாசை நாளன்று 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் நிலையில் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது மலையேற்ற பாதையிலும், கோயில் வளாகத்திலும் கடும் நெரிசலை ஏற்படுத்தி பக்தர்களுக்கு பாதுகாப்பாற்ற நிலையை உருவாகும் அபாயம் உள்ளது.
எனவே அடிவாரத்தில் இருந்து கோயில் வரை கூடுதல் வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு மதியம் 3:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட வேண்டும்.
கோயில் வளாகத்தில் நெரிசல் ஏற்படாத வகையில் சரியான திட்டமிடுதலுடன் தேவையான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். இதுபோல் அடிவாரத்தில் பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து செல்ல விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சரியான திட்டமிடுதலுடன் செயல்பட வேண்டும் என்பது சதுரகிரி பக்தர்களின் எதிர்பார்ப்பு.

