மீண்டும் பி.ஜி.பி., குழுமம் வசம் வந்தது தரணி சுகர்ஸ் -திவால் நடவடிக்கையில் விடுவிப்பு
மீண்டும் பி.ஜி.பி., குழுமம் வசம் வந்தது தரணி சுகர்ஸ் -திவால் நடவடிக்கையில் விடுவிப்பு
ADDED : மே 10, 2024 11:31 PM
சென்னை:திவால் நடவடிக்கையில் இருந்து, தரணி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை விடுவித்து, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனால், தரணி சுகர்ஸ் நிறுவனத்தின் சர்க்கரை ஆலைகள், மீண்டும் பி.ஜி.பி., குழுமத்தின் வசம் வந்துள்ளன.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார், திருவண்ணாமலை மாவட்டம் போளூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆகிய இடங்களில், தரணி சுகர்ஸ் நிறுவனத்தின் மூன்று சர்க்கரை ஆலைகள் உள்ளன.
கடந்த, 2016 -- 2019 காலகட்டத்தில் தொடர் மழையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தரணி சுகர்ஸ் சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தை சந்தித்தன.
இதனால், நிறுவனம் பெற்ற கடன்களை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், தரணி சுகர்ஸ் நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கையை துவங்கலாம் என்றும், நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவை கலைக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
தீர்ப்பாயத்தின் கலைப்பு உத்தரவுக்கு, 2023 ஆகஸ்ட்டில் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், தேசிய சொத்து மறுசீரமைப்பு கார்ப்பரேஷன், திவால் நடவடிக்கையை திரும்ப பெற முன்மொழிந்தது. இதை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு அங்கீகரித்துள்ளது.
அதனால், தரணி சுகர்ஸ் நிறுவன இயக்குனர்கள் குழுவின் அதிகாரங்கள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.
தரணி சுகர்ஸ் சர்க்கரை ஆலைகள் பி.ஜி.பி., குழுமத்தின் வசம் மீண்டும் வந்துள்ளன.
இது தொடர்பாக, பி.ஜி.பி., குழுமத்தின் அங்கமான தரணி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவன தலைவர் பழனி ஜி.பெரியசாமி கூறுகையில், ''தீர்ப்பாயத்தின் உத்தரவால், தரணி சுகர்ஸ் நிறுவனம், திவால் நடவடிக்கையில் இருந்து வெற்றிகரமாக வெளிவந்துள்ளது.
''தரணி சுகர்ஸ் நிறுவனத்தின் மூன்று சர்க்கரை ஆலைகளும் விரைவில் செயல்பட துவங்கும். 35,000திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளுடன் இணைந்து எங்கள் பயணத்தை தொடர இருக்கிறோம்,'' என்றார்.