யானை வழித்தடத்தை ஆக்கிரமித்ததா ஈஷா? அமைச்சர்கள் காரசார வாதம்
யானை வழித்தடத்தை ஆக்கிரமித்ததா ஈஷா? அமைச்சர்கள் காரசார வாதம்
ADDED : ஜூன் 26, 2024 09:06 AM

சென்னை : யானைகள் வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்துள்ளதா என்பது குறித்து, அமைச்சர்கள் காரசாரமாக விவாதம் நடத்தினர்.
சட்டசபையில் வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், யானைகள் வழித்தடம், பாதுகாப்பு குறித்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தனக்கு எதிரே அமர்ந்திருந்த காங்., - எம்.எல்.ஏ., ஹசன் மவுலானாவை அழைத்து, ஏதோ கூறினார். உடனே, அவர் தன் இருக்கைக்கு சென்றார். அவருக்கு பேசும் வாய்ப்பையும், சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டு, துரைமுருகன் பெற்றுக் கொடுத்தார்.
அப்போது நடந்த விவாதம்:
ஹசன்: யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டு, சாலைகளும் போடப்பட்டு உள்ளன. அங்கு யானைகள் வழித்தடம் என்று முறையாக குறிப்பு எழுதப்படவில்லை. கோவை ஈஷாவிலும் யானைகள் வழித்தடத்தை மறைத்துள்ளனர்.
அமைச்சர் மதிவேந்தன்: யானைகள் வழித்தடம் தொடர்பாக யாருக்கும் முழு அறிவு இல்லை. இதில், நிறைய விஷயங்கள் உள்ளன. இதை தெளிவுப்படுத்த வேண்டும். யானைகள் வழித்தடம் குறித்து, மக்களிடம் கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அமைச்சர் துரைமுருகன்: யானைகள் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது குறித்து, பத்திரிகைகளில் நிறைய செய்திகள் வந்துள்ளன. வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டடங்களையும் கட்டியுள்ளனர். கோவை ஈஷா யோகா மையம், வனத்துறை அனுமதி பெற்று தான் கட்டடங்கள் கட்டியதா; யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளதா; வன நிலங்களில் கைவைத்துள்ளனரா என்பது குறித்து நேரடியான பதிலை எம்.எல்.ஏ., கேட்கிறார்.
மதிவேந்தன்: யானை வழித்தடங்கள் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக, முயற்சி எடுத்து வருகிறோம். முழுமையாக விவரம் தெரிந்த பின் தான் ஈஷா குறித்து கருத்து சொல்ல முடியும். எதுவும் தெரியாமல் சொல்ல முடியாது. ஆய்வு செய்த பின்தான், முறையான அனுமதி பெற்றனரா என்பது தெரியவரும்.
துரைமுருகன்; நீங்கள் பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன. இதுவரை ஆய்வு செய்யவில்லையா என எம்.எல்.ஏ., கேட்கிறார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

