மாணவர்கள் எண்ணிக்கையில் தில்லுமுல்லு; தலைமை ஆசிரியை, பி.இ.ஓ., 'சஸ்பெண்ட்'
மாணவர்கள் எண்ணிக்கையில் தில்லுமுல்லு; தலைமை ஆசிரியை, பி.இ.ஓ., 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 10, 2024 03:25 AM
சென்னை: மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவில் பொய்யான தகவலை அளித்து, கல்வித்துறையை ஏமாற்றிய, அரசு பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத வட்டார கல்வி அதிகாரி ஆகியோர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியத்தில் உள்ள பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில், 566 மாணவர்கள் உள்ளதாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
இதில், முறைகேடுகள் நடப்பதாக, பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, துவக்க கல்வி இயக்குனர் நரேஷ், அப்பள்ளியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். மாவட்ட கல்வி அதிகாரிகள், கடந்த மாதம் 16, 20ம் தேதிகளில் ஆய்வு செய்தனர்.அப்போது, அப்பள்ளியில் மொத்தமே, 266 மாணவர்கள் மட்டுமே படிப்பது தெரியவந்தது.
அதாவது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு பணியாற்றும், 16 ஆசிரியர்களில் எட்டு பேருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு விடும் என்பதால், தலைமை ஆசிரியர் லதா உள்ளிட்ட ஆசிரியர்கள் இணைந்து, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த இமாலய முறைகேடை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்காத வட்டார கல்வி அதிகாரி மேரி ஜோசபின் மற்றும் தலைமை ஆசிரியை லதா ஆகியோர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

