பழைய கட்டடங்களை இடிப்பதில் அதிகாரிகள் உதவியுடன் 'தில்லுமுல்லு'
பழைய கட்டடங்களை இடிப்பதில் அதிகாரிகள் உதவியுடன் 'தில்லுமுல்லு'
ADDED : ஆக 21, 2024 09:05 AM
சென்னை : பழைய கட்டடங்களை இடித்து, புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில், அதிகாரிகள் துணையுடன் புதிய மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், பொது கட்டட விதிகளின்படி, 10,000 சதுரடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளே அனுமதி வழங்கலாம். இதற்கான அதிகாரம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புதிதாக கட்டட அனுமதிக்கு விண்ணப்பிப்போர், அதற்கான நிலத்தின் தற்போதைய நிலவரம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். அங்கு, பழைய கட்டடம் இருந்தால் அதை இடிக்க, சதுரடி அடிப்படையில் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும்.
பழைய கட்டடத்தை இடிப்பதால் ஏற்படும் கட்டட கழிவுகள் உள்ளிட்ட விஷயங்களை கருத்தில் வைத்து, இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி, சென்னையில் சதுர அடிக்கு, 22 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பழைய கட்டடங்களை இடித்து, புதிய கட்டட அனுமதி பெறுவதற்கான உத்தரவு தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி, நகராட்சிகளில், புதிய கட்டட அனுமதியின் போது, பழைய கட்டட இடிப்பு உத்தரவு பெறப்படுகிறது. இதற்கு பழைய கட்டடத்தின் வரைபடத்தை தாக்கல் செய்து, அதில் குறிப்பிட்டுள்ள பரப்பளவுக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை பரிசீலிப்பதில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கு இணையான தொகையை, அதிகாரிகள் தனியாக வசூலிக்கின்றனர். பல இடங்களில், விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டியவர்கள், ஒரு டம்மி வரைபடத்தை தாக்கல் செய்து, அதை இடித்து புதிய கட்டடம் கட்டுவதாக கூறி, புதிய வரைபட அனுமதி பெறுகின்றனர்.
இதன்படி, அவர்கள் பழைய கட்டடத்தை இடிப்பதில்லை. புதிய வரைபடம், அந்த பழைய கட்டடத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கும். இதனால், விதிமீறல் புகார் தொடர்பான நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம் என்று உரிமையாளர்கள் நினைக்கின்றனர்.
மண்டல அளவிலான அதிகாரிகள், கள ஆய்வு செய்யாமல், இதற்கு துணையாக செயல்படுகின்றனர். உயரதிகாரிகள் தலையிட்டு விசாரித்தால், இதில் நடக்கும் முறைகேடுகள் அம்பலமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.