ADDED : ஜூன் 30, 2024 01:07 AM
சென்னை:ஐ.டி.ஐ., நிறுவனங்களில், நாளை முதல் 15ம் தேதி வரை, நேரடி மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், 102 அரசு ஐ.டி.ஐ.,கள் மற்றும் 305 தனியார் ஐ.டி.ஐ., நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் நடப்பு கல்வியாண்டு பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கான, இணையதள கலந்தாய்வு நேற்று முன்தினம் நிறைவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி, தற்போது 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை, நாளை முதல் 15ம் தேதி வரை, ஐ.டி.ஐ., நிறுவனங்களில் நடக்க உள்ளது.
மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு, கல்வி சான்றிதழ்களுடன் நேரில் சென்று, தாம் விரும்பும் தொழிற்பிரிவை தேர்வு செய்து, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்.
இதில் ஏதேனும் சந்தேகம் என்றால், 94990 55689 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் சுந்தரவல்லி தெரிவித்து உள்ளார்.

