பறக்கும் படைகள் கலைப்பு:13 மாவட்ட எல்லைகளில் சோதனை
பறக்கும் படைகள் கலைப்பு:13 மாவட்ட எல்லைகளில் சோதனை
ADDED : ஏப் 23, 2024 12:49 AM

சென்னை: தமிழகத்தில் ஓட்டுப்பதிவு முடிவுற்றதால், அண்டை மாநில எல்லையோரம் அமைந்துள்ள, 13 மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு மற்றும் வீடியோ குழுக்கள் கலைக்கப்பட்டன.
தேர்தலின்போது பணப் பட்டுவாடாவை தடுக்க, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ குழு என, 1,638 குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குழுவில் வருவாய், காவல் துறையினர், ஒரு வீடியோகிராபர் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவினர், 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தினர்.
மாநிலத்தில் கடந்த 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியிருந்தார்.
ஆனால், நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என, வணிக அமைப்புகள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. பல்வேறு அமைப்பினர் அளித்த கோரிக்கை மனுக்களை, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, தேர்தல் நடக்க உள்ள, அண்டை மாநிலங்களின் எல்லை மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு ஆகியவற்றை கலைக்க, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தது.
அதைத் தொடர்ந்து, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ள திருவள்ளூர், வேலுார், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, திருப்பத்துார் ஆகிய 13 மாவட்ட எல்லைகளில் மட்டும், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் என, 171 குழுக்கள் 24 மணி நேரமும் செயல்பட, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இக்குழுக்களுக்கு 57 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இக்குழுவில் உள்ளவர்கள், மாநில எல்லையில் வாகன சோதனை நடத்துவர். சோதனையின்போது 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால், பறிமுதல் செய்யப்படும். ஓட்டுப்பதிவு நடக்கும் வரை, இக்குழுக்கள் செயல்பாட்டில் இருக்கும்.
மற்ற மாவட்டங்களில், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ குழு கலைக்கப்பட்டுள்ளன. எனவே, அப்பகுதிகளில் இனி சோதனைகள் இருக்காது.

