கள்ளச்சாராய பலிக்கு இழப்பீடு எதிர்த்த வழக்கு தள்ளுபடி
கள்ளச்சாராய பலிக்கு இழப்பீடு எதிர்த்த வழக்கு தள்ளுபடி
ADDED : ஜூலை 28, 2024 12:16 AM
சென்னை:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பங்களுக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 66 பேர் பலியாகினர்; மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த குமரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோதமான செயல். அதைக்குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது, சட்டவிரோத செயலை ஊக்கப்படுத்துவது போல ஆகும். எனவே, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இழப்பீடு வழங்குவது அரசின் முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிடாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

