மதுரை பார் அசோசியேஷன் நிர்வாகிகளுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
மதுரை பார் அசோசியேஷன் நிர்வாகிகளுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
ADDED : மே 30, 2024 01:32 AM
சென்னை:நீதிபதிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய விவகாரத்தில், மதுரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் மன்னிப்பு கோரியதை தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர் கிருபாகரன். பதவியில் இருந்த போது, வழக்கு ஒன்றை விசாரித்த இவர், 'இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தார்.
தீர்மானம்
இதையடுத்து, மதுரை பார் அசோசியேஷனில், நீதிபதி கிருபாகரனுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து, மதுரை முதன்மை மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு, 2015 ஜூலையில் கடிதம் அனுப்பினார்.
அதைத்தொடர்ந்து, மதுரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் பி.தர்மராஜ், ஏ.கே.ராமசாமிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது.
தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி, இருவரும் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பார் அசோசியேஷன் நிர்வாகிகள் என்ற முறையில் தாங்கள் செயல்பட்டதாகவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் எண்ணத்தின்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இருவரும் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரியுள்ளனர். உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்காக, மதுரையில் வழக்கறிஞர்கள் நடந்து கொண்ட விதம் அதிருப்தி அளிக்கிறது.
மன்னிப்பு
குற்றச்சாட்டுகளை மறுத்து, விளக்கங்கள் அளித்திருந்தாலும், அவர்களின் நிபந்தனையற்ற மன்னிப்பையும், நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். நீதித்துறையின் மீது அவர்களுக்கு மரியாதை இருப்பதையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
போராட்டத்தில், மேலும் பல வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை ஏற்றுள்ளதால், இருவருக்கும் எதிராக மேல் நடவடிக்கை தேவையில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.