ADDED : ஏப் 23, 2024 12:37 AM
சென்னை: விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை, தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில், மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். அவருக்கு எதிராக, விருதுநகரைச் சேர்ந்த, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப மாவட்டத் தலைவரான செல்வகுமார் தாக்கல் செய்த மனு:
தேர்தலின் போது, சட்ட விதிகளை மீறி, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் செயல்பட்டார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், வாக்காளர்கள் 'ஸ்லிப்' உடன், 'டோக்கன்' வினியோகம் செய்தார்.
உடனடியாக பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் அங்கு விரைந்தனர். சில ரசீதுகளையும், வாக்காளர்கள் அடையாள அட்டையையும் கைப்பற்றினர்.
இதுகுறித்து, நான் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. 'தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்த மறுநாள், இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதால், அவர்கள் நடவடிக்கை எடுப்பர்; தேர்தல் ஆணையத்துக்கு அளித்த புகாரின்படி, அவர்கள் நடவடிக்கை எடுப்பர்' என, முதல் பெஞ்ச் தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது.

