சோப்பு, சேமியா விற்பது கட்டாயம் ரேஷன் பணியாளர்கள் அதிருப்தி
சோப்பு, சேமியா விற்பது கட்டாயம் ரேஷன் பணியாளர்கள் அதிருப்தி
ADDED : மே 30, 2024 09:31 PM
தேனி:தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகளில் சோப்பு, சேமியா உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை விற்க அதிகாரிகள் கட்டாயப்படுத்தி, ஆய்வு என்ற பெயரில் தொடர் அபராதம் விதிப்பதாக ரேஷன்கடை பணியாளர்கள் சங்க சிறப்புத்தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகளில் பொருட்கள் சரியான நேரத்திற்கு வினியோகம் செய்யப்படுவதில்லை. அதேபோல் பொதுமக்களுக்கு வழங்குவதை ஆய்வு செய்யும் அதிகாரிகள் நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து வரும் பொருட்களின் எடையை சரிபார்க்க வேண்டும். கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல்துறை, நுகர்பொருள் வாணிப கழகம், தொழிலாளர் நலத்துறை என 4 துறைகளில் இருந்து 16க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ரேஷன்கடைகளில் ஆய்வு செய்கின்றனர். சில நேரங்களில் பில் போட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்குள் பொருட்கள் கூடுதலாக உள்ளது என அபராதம் விதிப்பதும் தொடர்கிறது.
இதனால் பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். விடுமுறை நாளான மே 26 ஞாயிறு அன்று ரேஷன் கடைகள் செயல்படும். பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் பல கடைகளுக்கு பொருட்கள் அனுப்பவில்லை. அரிசி , சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பொட்டலமாக வழங்க 15 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் நிறைவேற்றவில்லை. சத்தீஸ்கரில் பொருட்கள் பொட்டலமாக வழங்கப்படுகிறது.
அத்தியாவசியமற்ற சோப்பு, சேமியா, டீத்துாள் உள்ளிட்டவற்றை விற்க அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். விற்காவிட்டால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கின்றனர். இப் பொருட்கள் காலாவதியாகிவிட்டால் விற்பனையாளர் சொந்த பணத்தை செலுத்தும் நிலை உள்ளது. பொதுமக்களின் விருப்பமறிந்து பொருட்களை வழங்க வேண்டும். கூட்டுறவு, உணவு பாதுகாப்பு செயலாளரை சந்தித்து இக் கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம் என்றார்.