ADDED : ஆக 14, 2024 08:36 PM
சென்னை:ஜெயலலிதாவை அவதுாறாக பேசிய அமைச்சரை கண்டித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை வெளியிடாதது, அக்கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடந்த தி.மு.க., நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அன்பரசன் பேசுகையில், நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை மோசமாக விமர்சித்தார். அதற்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், உதயகுமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
அதேபோல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிடவில்லை. இது கட்சி வட்டாரங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. பழனிசாமிக்கு எதிராக, அ.தி.மு.க.,வினர் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், அமைச்சரை கண்டித்து சென்னையில் மாவட்டச்செயலர் கந்தன் தலைமையில், அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், போலீசார் அனுமதி வழங்கவில்லை என்பதால், நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.