தி.மு.க., - அ.தி.மு.க., போராட்டம் வல்லம் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு
தி.மு.க., - அ.தி.மு.க., போராட்டம் வல்லம் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : மே 31, 2024 02:15 AM
செஞ்சி: வல்லம் ஒன்றியத்தில் செய்து முடித்த பணிகளுக்கு பணம் தராமல் காலம் தாழ்த்துவதாக தி.மு.க.,வினர் சாலை மறியலிலும், அ.தி.மு.க.,வினர் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
செஞ்சி அடுத்த வல்லம் ஒன்றியத்தில் நடந்து முடிந்த அரசு ஒப்பந்த பணிகள் மற்றும் நுாறு நாள் வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு அளவீடு செய்வதிலும், பணம் வழங்க ஒப்புதல் தருவதிலும் பொறியாளர்கள் தாமதம் செய்வதாக புகார் எழுந்தது. நேற்று மதியம் 12:00 மணியளவில் ஒன்றிய துணைச் சேர்மன் கணவரும், வல்லம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளருமான அண்ணாதுரை தலைமையில் ஒன்றிய அலுவலகம் எதிரே செஞ்சி - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அதே நேரம், இதே காரணங்களுக்காக அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, நடராஜன் தலைமையில் ஒன்றிய அலுவலக வாயிலை மூடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து வந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் இரு கட்சியினரையும் சமாதானம் செய்து 12:30 மணியளவில் பி.டி.ஓ.,விடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் சென்றனர்.
பி.டி.ஓ., ஆனந்ததாஸ் பேச்சு வார்த்தை நடத்தினார். பணியில் சுணக்கமாக இருந்த ஒன்றிய பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும், நிலுவையில் உள்ள பில்களுக்கு விரைவாக பணம் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து இருதரப்பினரும் 1:45 மணியளவில் கலைந்து சென்றனர்.