தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது புகார் கொடுத்தவர் மீதே விசாரணை
தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது புகார் கொடுத்தவர் மீதே விசாரணை
ADDED : மார் 09, 2025 02:23 AM
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மதன்குமார் தாக்கல் செய்த மனுவில், 'மலை, குன்றுகளை, பர்கூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., மதியழகன் ஆக்கிரமித்து குவாரி நடத்தி வருகிறார்.
'இதுகுறித்து புகார் அளித்ததால், என் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பதோடு, வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் கூறியதாவது: மனுதாரர் கூறும் நிலம், எம்.எல்.ஏ., குடும்பத்துக்கு சொந்தமானது.
அது, புறம்போக்கு நிலம் இல்லை. தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் கூட, அந்த சொத்து விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.
அது மலை, குன்று எனவும், சட்டவிரோதமாக குவாரி நடத்துவதாகவும் கூறி, 20 கோடி ரூபாய் கேட்டு மனுதாரர் மிரட்டியதாக, போலீசில் எம்.எல்.ஏ., புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
இதற்கு, மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எம்.எல்.ஏ.,வை மனுதாரர் மிரட்டினாரா என்பது குறித்து பதிலளிக்குமாறு, போலீசுக்கு உத்தரவிட்டார். அதுவரை மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார்.