ADDED : பிப் 27, 2025 01:10 AM

திருச்சி:திருச்சி வயலுார் ரோட்டில் உள்ள சண்முகா நகரில் வசிப்பவர் சூர்யா, 38. இவர், தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவாவின் மகன். குடும்ப பிரச்னையால் தனியே வசிக்கிறார். பா.ஜ.,வில் இருந்த சூர்யா, பல சர்ச்சைகளில் சிக்கி, கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட, அக்கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளங்களில் பேசி வந்தார். இந்நிலையில், சண்முகா நகரில் உள்ள தான் வசிக்கும் வீட்டின் முன், 'இன்னோவா' காரை நிறுத்தியிருந்தார்.
காரின் பின்பக்கக் கண்ணாடி நேற்று காலை விரிசல் விட்டிருந்தது. கண்ணாடியை தனது எதிரிகள் தான் உடைத்து விட்டனர் என்று நினைத்த சூர்யா, இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக அவர் கூறிய நிலையில், அந்த கண்ணாடியை தடயவியல் வல்லுநர்கள் சோதனையிட்டனர். அப்போது, அவை உடைக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என தெரிவித்துள்ளதாக, போலீசார் கூறுகின்றனர்.
எனினும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, விசாரிக்கின்றனர்.

