ADDED : ஜூன் 29, 2024 02:27 AM
சென்னை:நிலத்தரகர் கொலை வழக்கில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன் உள்பட, 11 பேரை, சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு, சி.பி.ஐ., பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கொளத்துார் காந்தி நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரன். மாற்றுத்திறனாளியான இவர் நிலத்தரகர். நில பிரச்னையால், 2012 ஜன., 10ல் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கொளத்துார் போலீசார் வழக்கு பதிந்து, சையது இப்ராகிம், செல்வம், முரளி, குமார், பாலச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக, எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதை எதிர்த்து, புவனேஸ்வரனின் தந்தை சிவா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, அதை ரத்து செய்ததோடு, சி.பி.ஐ., விசாரிக்கும்படி, 2014ல் உத்தரவிட்டது.
அதன்படி, இந்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன் சேர்க்கப்பட்டார்.
அவர் உள்பட 12 பேருக்கு எதிராக, சென்னையில் உள்ள எம்.பி.,- - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், 2018ல் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் பாலச்சந்திரன் என்பவர் இறந்ததால், மற்ற 11 பேர் மீதான வழக்கு நடந்தது.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன் உட்பட 11 பேர்மீதான குற்றச்சாட்டுகள்நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, கடந்த பிப்ரவரியில் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, கொலையான புவனேஸ்வரனின் சகோதரர் மகேஸ்வரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி சி.பி.ஐ., மற்றும் ரங்கநாதன் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்., 26க்கு தள்ளிவைத்தது.

