ADDED : ஆக 24, 2024 11:10 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:
நடிகர் விஜய் உள்ளிட்ட எத்தனை பேர் வேண்டு மானாலும், அரசியல் கட்சி துவங்கலாம்; அது வரவேற்கத்தக்கது. எல்லோரும் அரசியலுக்கு வந்தாலும், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
இது வேறு சம்பவம்
தி.மு.க., என்ற பழம்பெரும் கட்சியை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.
நாங்கள் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களின் காரணமாக, மீண்டும் ஆட்சிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. கிருஷ்ணகிரி விவகாரத்தில், வெவ்வேறு சம்பவங்களை முடிச்சு போட்டு, இப்போது ஒன்றாக சேர்க்கப் பார்க்கின்றனர். அது வேறு சம்பவம்; இது வேறு சம்பவம்.
இதில், ஆளுங்கட்சி எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. யார் தவறு செய்திருந்தாலும், அவர்களை தண்டிக்கக்கூடிய முதல் தலைவர் ஸ்டாலின் தான்.
தமிழக தலைமை செயலர் முருகானந்தம் பொறுப்பேற்றதன் காரணமாக, மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்தித்தார். வெளியில் சிலர் கூறும் கற்பனைகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
கவர்னர் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும், அவர் பதவியில் இருப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.
எங்கள் இலக்கு
தி.மு.க., கூட்டணிக்குள் விரிசல் வராதா என்று வெளியில் இருந்து எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். யாருடைய கனவும் பலிக்காது. தேர்தல் என்று வந்தால், தி.மு.க., ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும். 234 என்பது எங்கள் லட்சியம். 200 என்பது எங்கள் இலக்கு; அதை அடைவோம்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறும் போது, வழக்கு தொடர்வது இயற்கை. சீமான் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியுள்ளார். திருச்சி எஸ்.பி., வருண்குமார் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

