அமைச்சர் பணம் பட்டுவாடா வீடியோ கடலுார் கலெக்டரிடம் தே.மு.தி.க., புகார்
அமைச்சர் பணம் பட்டுவாடா வீடியோ கடலுார் கலெக்டரிடம் தே.மு.தி.க., புகார்
ADDED : ஏப் 20, 2024 02:25 AM
விருத்தாசலம்:கடலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் உள்ளிட்ட 19 பேர் போட்டியிடுகின்றனர்.
நேற்று காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில், தி.மு.க., அமைச்சர் கணேசன், பணம் பட்டுவாடா செய்யும் வீடியே சமூக வலைதளங்களில் பரவியது.
மொத்தம், 44 வினாடிகள் ஓடும் வீடியோவில், தலா 100 ரூபாய் நோட்டை அமைச்சர் கணேசன் வழங்குகிறார். அப்போது, 'உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன்; இது மரியாதைக்காகவே' என்கிறார்.
மேலும், வாலிபர் ஒருவரின் தந்தை பெயரை குறிப்பிட்டு, அவரின் மகனா நீ என நலம் விசாரிப்பது போல் உள்ளது.
இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவின் முகவர் சேகர் நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அருண்தம்புராஜிடம் புகார் அளித்தார்.
தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து கூறியதாவது:
அமைச்சர் கணேசன், விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திட்டக்குடியில் ஓட்டுச்சாவடி எண் 206ல் தி.மு.க., ஐ.டி விங் நிர்வாகி தேர்தல் அலுவலர் போர்வையில் ஓட்டுச்சாவடிக்குள் முறைகேடாக இருந்துள்ளார். அ.தி.மு.க., முகவர்கள் கண்டறிந்து தட்டிக் கேட்டதும் வெளியேறி உள்ளார். இது அங்கிருந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்து தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

