'ரேஷன் அரிசி கடத்தலுக்கு ஊக்கம் அளிக்கும் தி.மு.க.,'
'ரேஷன் அரிசி கடத்தலுக்கு ஊக்கம் அளிக்கும் தி.மு.க.,'
ADDED : ஏப் 24, 2024 09:03 PM
சென்னை:'ரேஷன் அரிசி கடத்தலுக்கு ஊக்கம் அளிக்கும் தி.மு.க., அரசின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில், மாதம் 3.50 லட்சம் கிலோ ரேஷன் அரிசி, வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இதை கண்டித்த வழக்கறிஞர் மாரிசெல்வம் வீட்டின் மீது, பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
இதற்கு முக்கியக் காரணமான கார்த்திக், தி.மு.க., இளைஞர் அணி பொறுப்பில் உள்ளதாகவும், இந்த தாக்குதலில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தி.மு.க., துணைப் பொதுச் செயலர் கனிமொழியுடன், கார்த்திக் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதிலிருந்து, தி.மு.க., அரிசி கடத்தலுக்கு எந்த அளவுக்கு துணை போகிறது என்பது, தற்போது வெளிச்சமாகி உள்ளது.
ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணையாக, தி.மு.க., அரசு செயல்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். உள்ளூர் தி.மு.க.,வினருக்கு அஞ்சி, அரசு ஊழியர்களும், காவல் துறையினரும், பொது மக்களும் செய்வதறியாமல் திகைக்கின்றனர். கடத்தலுக்கு ஊக்கம் அளிக்கும், தி.மு.க., அரசின் செயல்பாடு கண்டனத்துக்கு உரியது.
தமிழகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக விளங்க வேண்டும். அமைதிப் பூங்காவாக திகழ வேண்டும் என்ற அக்கறை, தி.மு.க., அரசுக்கு இருக்குமானால், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.,வினரை கைது செய்து, தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

