'தி.மு.க., அரசு பதவி விலகணும்'; சட்டம் ஒழுங்கு சீரழிவில் தமிழகம் முதலிடம்'
'தி.மு.க., அரசு பதவி விலகணும்'; சட்டம் ஒழுங்கு சீரழிவில் தமிழகம் முதலிடம்'
ADDED : ஜூலை 30, 2024 01:49 AM
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
'கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மற்றும் அதை தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள் குறித்த வழக்குகள், 90 நாட்களில் முடிக்கப்படும்' என, முதல்வர் தேர்தல் பிரசாரத்தின்போது, வாக்குறுதி அளித்தார். ஆட்சி பொறுப்பேற்று, 1,190 நாட்கள் முடிந்த நிலையில், 'மெகா சீரியல்' தொடர்போல் நீண்டு கொண்டே செல்கிறது. பல வழக்குகளில் இந்த நிலைமைதான் நீடிக்கிறது.
அன்றாடம் கொலைகள், கொலை வெறி தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அரசு ஊழியர்களை மிரட்டுவது, காவல் துறையினரை, பொது மக்களை மிரட்டுவது என, தி.மு.க.,வினர் வன்முறையில் ஈடுபடுவதும், பல சமூக விரோத செயல்களுக்கு, அவர்கள் உடந்தையாக இருப்பதும்தான், குற்ற நிகழ்வுகள் அதிகரிக்க காரணம்.
இதை கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வருக்கு உண்டு. இதுகுறித்து துளியும் கவலைப்படாமல், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக, தனக்கு தானே தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறார். முதல்வரின் இதுபோன்ற செயல்பாட்டால், பொது மக்கள் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீரழிவில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த நிலை நீடித்தால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குன்றி, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே, கொலை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும். காவல் துறையினரை கண்டு ரவுடிகள் அஞ்சும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-------------------------
தி.மு.க., அரசு பதவி விலகணும்
கடலுார் நகர அ.தி.மு.க., வட்டச் செயலர் பத்மநாபன், சிவங்கை மாவட்ட பா.ஜ., நிர்வாகி செல்வகுமார், கன்னியாகுமரி காங்கிரஸ் நிர்வாகி உஷா ராணியின் கணவர் ஜாக்சன் ஆகிய மூவரும், ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் -- -ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்பதையே, இந்த அரசியல் படுகொலைகள் காட்டுகின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலையாய கடமை, சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது தான். இனியாவது காவல் துறையை தட்டி எழுப்பி, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அதை செய்ய முடியாவிட்டால், கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று, தமிழக அரசு பதவி விலக வேண்டும்.
அன்புமணி
பா.ம.க., தலைவர்
ெஹல்மெட் அபராதத்தில்
போலீசார் முழு கவனம்
தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் கே.ஜி.ரமேஷ்குமார் அறிக்கை:
ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் தமிழக போலீசார். சமீப காலமாக, அவர்களின் முழு கவனமும், ெஹல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதில் மட்டுமே உள்ளது. இரவில் குடிமகன்களின் வாகனத்தை சோதனை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உயர் அதிகாரிகள், 'ெஹல்மெட்' வசூலுக்கு விதித்துள்ள இலக்குதான் இதற்கு காரணம். இதனால், சட்டம் ஒழுங்கு போலீசாரின் ரெகுலர் பணிகள் பாதிக்கின்றன.
ரவுடிகளை தேடி பிடித்து, குற்றங்கள் நடக்காமல் தடுக்க, ரோந்து பணிகள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தமிழகத்தை அமைதி பூங்காவாக தொடரச் செய்யும் முனைப்பில் ஆர்வம் காட்ட முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

