'ஸ்டிக்கர்' ஒட்டும் வேலையை தான் தி.மு.க., அரசு செய்கிறது: முருகன்
'ஸ்டிக்கர்' ஒட்டும் வேலையை தான் தி.மு.க., அரசு செய்கிறது: முருகன்
ADDED : ஆக 20, 2024 03:56 AM

சென்னை: சென்னையில் உள்ள துார்தர்ஷன் அலுவலகத்தில், மத்திய மக்கள் தொடர்பு நிறுவனம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகத்தைச் சேர்ந்த தெற்கு மண்டல அதிகாரிகளுடன், மத்திய அமைச்சர் எல்.முருகன் நேற்று ஆய்வு நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
குறைந்த வாடகையில் தொழிலாளர்களுக்கு தங்குமிடம் அமைத்து தரும் மத்திய அரசின் திட்டப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 18,720 படுக்கைகளுடன் தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது. 700 கோடி ரூபாயிலான இந்தத் திட்டத்திற்கு, மத்திய அரசு 37 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக, 498 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், தொழிலாளர் தங்குமிடத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசின் பெயரை குறிப்பிடவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு, 'ஸ்டிக்கர்' ஒட்டும் வேலையைத் தான் தி.மு.க., அரசு செய்து வருகிறது.
சென்னை மெட்ரோ திட்டப் பணிகள் குறித்த கணக்கு விவரங்கள் அடங்கிய அறிக்கையை, தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை. அதனால்தான் மத்திய அரசு நிதி தாமதமாகிறது. அரசியல் காரணங்களுக்காக நிதி ஒதுக்கவில்லை என, தி.மு.க., அரசு கூறுவதில், துளியும் உண்மை இல்லை.
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா, அரசியலுக்கு அப்பாற்பட்டது. கருணாநிதிக்கு மட்டுமல்ல, காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களுக்கும், மத்திய அரசு நாணயம் வெளியிட்டுள்ளது' என்றார்.

