ADDED : மே 16, 2024 06:16 AM

சென்னை: அரசு டாக்டர்களை தி.மு.க., அரசு அங்கீகரிக்க மறுப்பதாக அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்தார்
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, ‛அ.தி.மு.க., ஆட்சியில் ஊதிய உயர்வு கேட்டு, நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் எங்களை சந்தித்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்து, மூன்றாண்டுகள் முடிந்தும், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற வருத்தமும், ஏக்கமும் உள்ளது.
கர்நாடகாவில், கொரோனாவின் முதல் அலையின் போதே, டாக்டர்களின் கோரிக்கையை, அம்மாநில அரசு நிறைவேற்றியது. ஆனால், கொரோனாவின் மூன்று அலைகளில் உயிரை பணயம் வைத்து பணியாற்றி உள்ளோம். எங்களது கோரிக்கையை, தமிழக அரசு நிறைவேற்ற மறுக்கிறது. அரசு டாக்டர்களை அங்கீகரிக்க மறுக்கும், ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே, பல ஆண்டு கோரிக்கையான ஊதிய உயர்வு வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.