பின்னணியில் தி.மு.க., அரசு: வானதி சீனிவாசன் சந்தேகம்
பின்னணியில் தி.மு.க., அரசு: வானதி சீனிவாசன் சந்தேகம்
ADDED : ஜூலை 02, 2024 05:18 AM

பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், சாலையோர சுவர்களில், 'நீட் தேர்வை இந்தியா திணிக்கிறது; இந்தியாவிலிருந்து தமிழ்நாடு வெளியேற வேண்டும்', 'இந்தியா ஒழிக' என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்கலாம்; போராடலாம். ஆனால், நீட் எதிர்ப்பு என்ற போர்வையில், தேசப் பிரிவினையைத் துாண்டுவதை, எவ்விதத்திலும் ஏற்க முடியாது. இது மன்னிக்கவே முடியாத குற்றம்.
தேசப் பிரிவினையை துாண்டும், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை, தி.மு.க., அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
தி.மு.க., தனி தமிழ்நாடு என்ற பிரிவினையை, அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட கட்சி. அரசியல் சட்டம் உருவான பின், பிரிவினை கோரிக்கையை வெளிப்படையாக முன்வைத்தால் கட்சி நடத்த முடியாது, ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க முடியாது என்பதால், பிரிவினை கோரிக்கையை அக்கட்சி கைவிட்டது. ஆனால், மக்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைப்பதை, கைவிடவில்லை.
பிரிவினை சித்தாந்தத்தை மக்களிடம் விதைக்க, தி.மு.க., 'நீட் எதிர்ப்பை ஆயுதமாக எடுத்துள்ளது. பிரிவினை சித்தாந்தத்தை துாண்டும், எந்தவொரு செயல்பாட்டையும் அனுமதிக்க முடியாது. பிரிவினை வாசகங்கள் எழுதியவர்களை கண்டறிந்து, கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் பிரிவினைவாதிகளுக்கு எந்த இடமும் இல்லை என்பதை, முதல்வர் ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும்.