தி.மு.க.,வை குத்தகைக்கு நடத்தும் ஸ்டாலின்! மதுரையில் பழனிசாமி பேட்டி
தி.மு.க.,வை குத்தகைக்கு நடத்தும் ஸ்டாலின்! மதுரையில் பழனிசாமி பேட்டி
UPDATED : ஏப் 10, 2024 02:51 AM
ADDED : ஏப் 10, 2024 02:49 AM

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் ராஜ்சத்தியன் உடன் சென்றனர்.
பழனிசாமி கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்தோம். பிடித்தமின்றி அகவிலைப்படி கொடுத்தோம். ஆனால், தி.மு.க., அரசு மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை, தலா ஆறு மாதங்கள் என, அகவிலைப்படியை பிடித்தம் செய்தே கொடுத்தது.
![]() |
அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தி.மு.க., நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என அறிவித்தும், அதை நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது, தேர்தலை முன்னிட்டு மீண்டும் ஆசை வார்த்தை கூறுகிறார், ஸ்டாலின்.
சர்க்கரை என்று சொன்னால் இனிக்காது. அதை வாயில் போட்டால் தான் இனிக்கும். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தாமல், இப்போது மீண்டும் சொல்வது தி.மு.க.,வின் வாடிக்கை.
நிலையான கொள்கை இல்லாத கட்சி பா.ம.க., - அ.தி.மு.க.,வில், 100 சதவீதம் வாரிசு அரசியல் இல்லை.
எனக்கு பின்னால் யாரோ ஒரு தொண்டன் தான் தலைமை பொறுப்புக்கு வருவார். ஆனால், தி.மு.க., ஸ்டாலின் தான் கட்சியை குத்தகைக்கு எடுத்து நடத்துகிறார். தி.மு.க., கட்சி அல்ல; கார்ப்பரேட் கம்பெனி.
ஸ்டாலின் பச்சைப் பொய் பேசுகிறார். 2021 தேர்தலில் 520 வாக்குறுதிகள் அளித்தார். அதில், 98 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்கிறார். இது பெரிய பச்சைப் பொய்.
இவ்வாறு பழனிசாமி கூறினார்.


