ADDED : மே 23, 2024 10:13 PM

திண்டுக்கல்;திண்டுக்கல்லில் தி.மு.க., பிரமுகரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். முன் விரோதத்தில் நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த (தி.மு.க.,) பிரமுகர் மாயாண்டி ஜோசப் 60. இவரது மனைவி நிர்மலா,முன்னாள் அடியனூத்து ஊராட்சி தலைவராக ( தி.மு.க.,) இருந்தார். இவர் உடல் நலம் சரியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மாயாண்டி ஜோசப், யாகப்பன்பட்டியில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் பார் நடத்துகிறார். மூத்த மகளுக்கு திருமணமான நிலையில் 2 குழந்தைகளும் வெளியூரில் படிக்கின்றனர். இந்நிலையில் மாயாண்டி ஜோசப், மட்டும் தனியாக வேடப்பட்டியில் வசிக்கிறார். இரவு 8:00 மணிக்கு மாயாண்டி ஜோசப், யாகப்பன் பட்டியில் உள்ள தனது பாரிலிருந்து டூவீலரில் வேடப்பட்டிக்கு வந்தார். அப்போது இவர் வருகைக்காக முன்னரே காத்திருந்த மர்ம கும்பல் எதிர் திசையில் டூவீலரில் வந்து மாயாண்டி ஜோசப், மீது மோதினர். நிலை தடுமாறி கீழே விழுந்த மாயாண்டி ஜோசப்பை, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பியது. தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என விசாரிக்கின்றனர். மாயாண்டி ஜோசப் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

