தி.மு.க.,வினர் சுயநலத்துக்காக 'கள்'ளுக்கு தடை பா.ஜ., அண்ணாமலை குற்றச்சாட்டு
தி.மு.க.,வினர் சுயநலத்துக்காக 'கள்'ளுக்கு தடை பா.ஜ., அண்ணாமலை குற்றச்சாட்டு
ADDED : மார் 04, 2025 06:54 PM

உடுமலை:''மதுபான ஆலைகள் நடத்தும் தி.மு.க., பிரமுகர்கள் நலனுக்காக 'கள்' இறக்க தமிழக அரசு தடை விதித்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது,'' என பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை கொங்கல்நகரத்தில், தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், கள் விடுதலை கருத்தரங்கம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாநிலத்தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் பங்கேற்ற, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
தென்னை விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், மத்திய அரசு பாமாயில் இறக்குமதிக்கு வரியை அதிகரித்ததால், தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஆனால், தி.மு.க., அரசு விவசாயிகளின் எந்த பிரச்னையையும் கண்டுகொள்வதில்லை.
தென்னை, பனை மரங்களில் இருந்து பெறப்படும் கள், போதை பொருள் அல்ல; உணவு பொருள் என பல முறை தெளிவுபடுத்தியும், தமிழக அரசு விவசாயிகள் கோரிக்கையை புறக்கணித்து வருகிறது.
கள் இறக்க அனுமதி கொடுத்தால், தி.மு.க., வின் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நடத்தும் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
'டாஸ்மாக்' மதுவிற்பனையால், அரசுக்கு நேரடியாக கிடைக்கும் வருவாயை விட, தி.மு.க., வினருக்கு மறைமுகமாக அதிக வருவாய் கிடைக்கிறது.
தென்னை, பனை விவசாயிகள் கோரிக்கை குறித்து பா.ஜ., ஆய்வு செய்து, விரிவான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, 'தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்குவது, மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றால் அரசுக்கு, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்' என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், தி.மு.க., அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும், 2026 தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில், ஆட்சி அமைத்தால், கள் மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
கருத்தரங்கில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிக்காலத்தில், பட்டி தொட்டியெங்கும் போதை பொருட்கள் விற்பனை தடையில்லாமல் நடக்கிறது.
அதை கட்டுப்படுத்த லாயக்கற்ற அரசு, தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க தடை விதித்து விவசாயிகளை வஞ்சிக்கிறது.
மக்கள் விரோத தி.மு.க., அரசுக்கு வரும் தேர்தலில், தமிழக மக்கள் தமிழக பாடம் புகட்டுவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும்.
இவ்வாறு தினகரன் பேசினார்.