கமிஷனுக்காக மூடைகளை எடைபோட விடாமல் அலைக்கழிக்கும் தி.மு.க. ஒன்றிய செயலாளர்
கமிஷனுக்காக மூடைகளை எடைபோட விடாமல் அலைக்கழிக்கும் தி.மு.க. ஒன்றிய செயலாளர்
UPDATED : பிப் 22, 2025 06:49 AM
ADDED : பிப் 22, 2025 05:51 AM

மதுரை: மதுரை மாவட்டம் செல்லம்பட்டி நெல் கொள்முதல் மையத்தில் கமிஷனுக்காக மூடைகளை எடைபோட விடாமல் அப்பகுதி தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஒருவர் ஐந்து நாட்கள் அலைக்கழித்ததாக ம.தி.மு.க., ஒன்றிய செயலாளரும் விவசாயியுமான மணவாளக்கண்ணன் கண்ணீருடன் கலெக்டர் சங்கீதாவிடம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் அளித்தார்.
பேச முடியாமல் தேம்பி அழுததால் சக விவசாயிகள் தண்ணீர் கொடுத்து ஆறுதல் தெரிவித்தனர்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: செல்லம்பட்டியில் 'அவர்' (சுதாகரன்) தி.மு.க., ஒன்றிய செயலாளர். அங்கு எல்லா நிர்வாகிகளுக்கும் காசு கொடுத்தால் தான் நெல் மூடைகளை நெல் கொள்முதல் மையத்தில் எடைபோட அனுமதிக்க முடியும் என கட்டாயப்படுத்துகிறார். எனது நெல் மூடைகளை 5 நாட்கள் எடைபோடாமல் நிறுத்தி வைத்து என்னை அலைக்கழித்தார்.
விவசாயிகள் நெல் பயிரிட முடியாமல் பரிதவிக்கிறோம். 40 கிலோ மூடைக்கு ரூ.70 கமிஷன் கேட்கின்றனர். மாநில அரசு சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூடைக்கு ரூ.10 தருகிறது.
அதுபோக விவசாயிகளும் ஒரு மூடைக்கு ரூ.25, அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு ரூ.25, உள்ளூர் பிரமுகர்களுக்கு ரூ.20 கொடுத்தால் நெல் கொள்முதல் மையமே செயல்படும். இல்லாவிட்டால் மையத்தை நடத்தவிட மாட்டார்.
மூன்றாண்டுகளாக இப்படித்தான் இருந்தது என்றாலும் இந்த முறை எல்லை தாண்டி செயல்படுகின்றனர். எல்லோரின் ஆதரவுடன் தான் கமிஷன் வசூலிக்கின்றனர். யாரிடமும் பேசி ஒரு பயனும் இல்லை. நேற்று 17 மையங்கள் திறந்துள்ளனர்.
செல்லம்பட்டி பகுதியில் 95 சதவீத அளவுக்கு நெல் அறுவடை முடிந்து விட்டது. ஆனால் 3 நாட்களுக்கு முன்பாக 17 மையங்களை எதற்காக திறக்க வேண்டும். இப்போது மையத்தை திறந்தால் வெளியூர் வியாபாரிகள் தான் நெல்லை விற்று லாபம் பார்ப்பார்கள்.
விவசாயிகளுக்கு இங்கே வேலையில்லை, வியாபாரிகளுக்கு தான் முக்கியத்துவம் தருகின்றனர். செல்லம்பட்டியில் 5 சதவீத நெல் கூட அறுவடைக்கு இல்லை. இன்னும் 50 மையங்கள் செயல்படுகிறது. கலெக்டர் சங்கீதாவிடமும் தெரிவித்தேன். யாரிடமும் சொன்னாலும் நெல்லை எடை போட விடமாட்டேன் என்றார் தி.மு.க., ஒன்றிய செயலாளர். அவருக்கு பணம் கொடுத்த பின் (இன்னொருவர் மூலம்) தான் எடை போட அனுமதித்தனர். விவசாயிகளிடம் மூடைக்கு ரூ.65 முதல் ரூ.80 வரை வசூலிக்கின்றனர்.
எங்கள் தலைமையிடம் (ம.தி.மு.க.,) தெரிவித்துவிட்டேன். இதற்கு மேல் என்ன செய்வது.
இவ்வாறு பேசினார்.
கலெக்டர் சங்கீதாவிடம் ஆதங்கத்தை தெரிவித்த போது தேம்பி அழுத மணவாளக்கண்ணன், வெளியே வந்து அழுது கொண்டே இருந்தார். பத்திரிகையாளர்கள் சமாதானப்படுத்திய போது, உள்ளே பேசியதையே மீண்டும் பேட்டியாக தேம்பிக் கொண்டே கூறினார்.

