ADDED : ஜூன் 09, 2024 03:28 AM
லோக்சபா தேர்தலில் வென்ற, தி.மு.க., --- எம்.பி.,க்களின் முதல் கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், நேற்று மாலை 6:30 மணிக்கு நடந்தது. 30 நிமிடங்கள் நடந்த கூட்டத்தில், முதல்வரும் தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், பொதுச்செயலர் துரைமுருகன், எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராஜா, தயாநிதி, ஜெகத்ரட்சகன், தி.மு.க., துணை பொதுச் செயலர்கள் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
l கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு பாராட்டு விழா, இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில், தி.மு.க., கூட்டணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற முதல்வருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா, வரும் 14ம் தேதி கோவையில் நடத்தப்படும்
l பார்லிமென்ட் வளாகத்தில் அகற்றப்பட்ட காந்தி, அம்பேத்கர் சிலைகளை, மீண்டும் பழைய இடத்திலேயே நிறுவ வேண்டும்
l தமிழகத்தின் திட்டங்களுக்காக, நிதி உரிமை, மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக, பார்லிமென்ட்டில் தி.மு.க., அயராது குரல் கொடுக்கும்
l 'நீட்' தேர்வு மையங்களில் நடந்த மோசடி வெளிவந்துள்ளது. எந்த வகையில் பார்த்தாலும் மோசடியான தேர்வாக நீட் உள்ளது. எனவே, அதற்கு முடிவு கட்ட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் இந்த கோரிக்கையை, மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும்
l பார்லிமென்ட் பாதுகாப்பு பணியில், சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இம்முடிவை உடனடியாக திரும்ப பெற்று, மீண்டும் பார்லிமென்ட் பாதுகாப்பு சர்வீஸ் என்ற,- பி.எஸ்.எஸ்., அணியை, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

