ஆட்சி, அதிகாரத்தில் பங்கு; பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்: அடித்துச்சொல்கிறார் திருமாவளவன்
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு; பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்: அடித்துச்சொல்கிறார் திருமாவளவன்
UPDATED : செப் 16, 2024 12:30 PM
ADDED : செப் 16, 2024 12:23 PM

சென்னை: 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு பற்றி பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்,' என வி.சி.க., கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
வி.சி.க., சார்பில் நடத்தப்பட உள்ள மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கு பெற வேண்டும் என சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க., விற்கு அழைப்பு விடுத்திருந்தார் திருமாவளவன். மேலும் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என அவரது கட்சி சார்பில் எக்ஸ் வலை தளத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டு இருந்தது.
பாராட்டு
இந்நிலையில், இன்று(செப்.,16) தமிழக முதல்வர் ஸ்டாலினை கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். பின்னர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு, திரும்பிய நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். முதல்வர் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவருக்கு பாராட்டு தெரிவித்தோம். அக்டோபர் 2ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்த உள்ள நிலையில் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தோம்.
2 கோரிக்கைகள்
முதல் கோரிக்கை, அரசு மதுக்கடைகளில் விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். இரண்டாவது தேசிய அளவில் கோரிக்கை வைத்தோம். மது விலக்கை இந்திய அளவில் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பதாகும்.
மருத்துவ காரணங்களுக்கு பயன்படுத்த கூடிய போதை மருந்துகள் தவிர, மற்ற எந்த போதை ப்பொருட்களும் பயன்பாட்டில் இருக்க கூடாது, அவற்றை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.மது ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க., சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்., இளங்கோவன் பங்கேற்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். மதுவிலக்கு தமிழகத்தில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.
விரிசல் இல்லை
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது 1999ம் ஆண்டில் இருந்து பேசி வரும் கருத்து. இது குறித்து ஸ்டாலின் இடம் பேசவில்லை. இந்த கோரிக்கையை நாங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறோம். எப்போது வலுவாக பேச வேண்டுமோ அந்த நேரத்தில் பேசுவோம்.
தேர்தலுக்கும் மது ஒழிப்பு மாநாட்டிற்கும் தொடர்பு இல்லை. ஆயிரக்கணக்கான பெண்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையை முன்னிறுத்தி, மது ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளோம். எனவே இதனை தேர்தல் அரசியலுடன் பிணைத்து பார்க்க வேண்டாம். வி.சி.க., மற்றும் தி.மு.க.,விற்கும் இடையே எந்த விரிசலும் இல்லை. எந்த நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கைகளில் உறுதியாக இருக்கிறோம். மதுவிற்கு எதிராக இருப்பவர்கள் அனைவரும் மாநாட்டில் பங்கேற்று குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.