'குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரை தி.மு.க.,வினர் வீடுகள் முன் வைப்போம்'
'குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரை தி.மு.க.,வினர் வீடுகள் முன் வைப்போம்'
ADDED : செப் 16, 2024 02:05 AM

சென்னை: தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா அளித்த பேட்டி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின், 'ஆட்சியில் பங்கு' என்ற கோரிக்கை சரியானது; நாங்கள் இதை செயல்படுத்துபவர்கள். கூட்டணி அரசு நிலையாக இருக்காது என தி.மு.க.,வினர் கூறுகின்றனர். மத்தியில் வாஜ்பாய் தலைமையில், கூட்டணி அரசு நிலையாகத்தான் இருந்தது.
எங்களுக்கு பெரும்பான்மை இருந்தபோதும், கூட்டணி கட்சிகளுடன் அதிகாரத்தை பகிர்ந்துள்ளோம். அதனால், கூட்டணி கட்சியினரையும் தி.மு.க., ஆட்சியில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், ஸ்டாலின் குடும்பத்தினர், ஒருபுறம் பணம் சம்பாதிக்க, சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்துவர்; மறுபுறம் இருமொழி கொள்கை என்பர். சென்னையில் உள்ள மாநகராட்சி கவுன்சிலர்கள் யாரேனும், அவர்கள் வீட்டு குழந்தையை, இருமொழி கொள்கையுள்ள பள்ளிகளில் படிக்க வைக்கின்றனரா; தன் வீட்டுக்கு மும்மொழி; தமிழகத்திற்கு இருமொழி. இது என்ன போலித்தனம்.
இருமொழி கொள்கையை ஆதரிப்பவர்கள், சி.பி.எஸ்.இ., பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளின் 'டிசி'யை வாங்கி, இருமொழி கொள்கை உள்ள சமச்சீர் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
இந்த வேடதாரிகளை தோலுரித்து காட்டாமல் பா.ஜ., விடாது. இருமொழி கொள்கை என்று பேசுவோரின் குழந்தைகள், எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்ற விபரத்தை, அவர்கள் வீட்டு வாசலில் போர்டு எழுதி வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

