அடங்க மாட்றாங்கய்யா... வேலை செய்ய லஞ்சம் அரசு அதிகாரிகள் கைது
அடங்க மாட்றாங்கய்யா... வேலை செய்ய லஞ்சம் அரசு அதிகாரிகள் கைது
ADDED : மே 30, 2024 01:51 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி விளாத்திக்குளம் சாலையம் தெருவைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 50. இவர் நிலத்துக்கு பட்டா கேட்டு, ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். 4,000 ரூபாய் வேண்டும் என சர்வேயர் செல்வமாடசாமி கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவலிங்கம், துாத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். நேற்று மதியம் விளாத்திக்குளம் அருகே சர்வேயர் செல்வமாடசாமியிடம் போலீசார் கொடுத்திருந்த ரசாயனம் தடவிய பணத்தை சிவலிங்கம் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், செல்வமாடசாமியை கைது செய்து விசாரித்தனர்.
திருவண்ணாமலை: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஆலம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ், 64. இவரது பூர்வீக இடத்திற்கான சொத்து வரியை, தந்தை பெயரில் இருந்து இவர் பெயருக்கு மாற்ற விண்ணப்பித்தார். நேரில் வருமாறு, திருவண்ணாமலை ஆர்.ஐ., செல்வராணி, மொபைல் போனில் அழைத்தார்.
அலுவலகம் சென்ற ரமேஷிடம், ஆர்.ஐ., செல்வராணி மற்றும் உதவியாளர் ராகுல், 30,000 ரூபாயை நேற்று பெற்றனர். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, முத்தணம்பாளையத்தை சேர்ந்தவர் கமலா, 50, வாரிசு சான்றிதழ் கேட்டு, நல்லுாரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
வருவாய் ஆய்வாளர் மைதிலியை, 45, அணுகினார். சான்றிதழ் வழங்க, அந்த பெண் அதிகாரி 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அதிர்ச்சியடைந்த ஜீவா, திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
நேற்று மதியம் அலுவலகத்தில், வருவாய் ஆய்வாளர் மைதிலியிடம், 2,000 ரூபாயை லஞ்சமாக கொடுத்தார். மறைந்திருந்த போலீசார், மைதிலியை கைது செய்து அவரிடம் விசாரித்தனர்.