டாக்டர் - வக்கீல் தம்பதி குடும்பத்துடன் மர்ம மரணம்: ரூ.5 கோடி கடன் தொல்லையால் விபரீத முடிவு
டாக்டர் - வக்கீல் தம்பதி குடும்பத்துடன் மர்ம மரணம்: ரூ.5 கோடி கடன் தொல்லையால் விபரீத முடிவு
ADDED : மார் 14, 2025 12:47 AM

சென்னை:ஐந்து கோடி ரூபாய் கடன் தொல்லையால், டாக்டர், அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் என, நான்கு பேர் மர்மமான முறையில், தனித்தனி அறைகளில் தற்கொலை செய்த சம்பவம், சென்னை அண்ணா நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 53; டாக்டர். இவரது மனைவி சுமதி, 47; சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். தம்பதிக்கு, ஜஸ்வந்த் குமார், 19, லிங்கேஷ்குமார், 17, என, இரு மகன்கள் உள்ளனர்.
இதில், ஐஸ்வந்த், பிளஸ் 2 முடித்துவிட்டு, 'நீட்' நுழைவு தேர்வுக்கும், லிங்கேஷ்குமார் அதே பகுதியில், தனியார் பள்ளியில் 10ம் வகுப்பும் படிக்கின்றனர்.
பாலமுருகனுக்கு, கொளத்துாரில் சொந்தமாக வீடு இருந்தும், அண்ணா நகர், 17வது பிரதான சாலை, அடுக்குமாடி குடியிருப்பில், ஆறு ஆண்டுகளுக்கு முன் வாடகைக்கு குடியேறி உள்ளார்.
பதற்றமான சூழல்
அவர், 'கோல்டன் ஸ்கேன்' என்ற பெயரில், அண்ணா நகரில் இரண்டு, கொளத்துாரில் ஒன்று என, மூன்று, 'ஸ்கேன் சென்டர்'களை நடத்தி வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல, காலை 6:00 மணிக்கு, பாலமுருகனின் கார் ஓட்டுநர் விஜய், வீட்டு பணிப்பெண் ரேவதி ஆகியோர் வீட்டிற்கு வந்துள்ளனர். இருவரும் பல முறை, டாக்டர் பாலமுருகனின் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.
பாலமுருகன், சுமதி ஆகியோரின் மொபைல் போன் எண்களுக்கும் தொடர்பு கொண்டுள்ளனர். இருவரும் அழைப்பை ஏற்கவில்லை.
இதனால், சந்தேகமடைந்த இருவரும், அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி ஜெயராமனிடம் தெரிவித்துள்ளனர். கதவு திறக்காதது பற்றி, பூந்தமல்லியில் உள்ள பாலமுருகனின் உறவினருக்கு தகவல் தெரிவித்துஉள்ளனர்.
அதற்குள், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள், பாலமுருகன் வீடு முன் குவிந்துவிட்டனர். மிகவும் பதற்றமான சூழலில் வீட்டின் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, நான்கு பேரும் தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதுபற்றி, அவசர போலீஸ் உதவி எண் 100க்கும், திருமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விரைந்து சென்று, பாலமுருகன் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தனர்.
அப்போது, சுமதியும், மூத்த மகன் ஜஸ்வந்த் குமாரும், ஒரு அறையில் மின்விசிறியில், தனித்தனியாக துாக்கில் தொங்கியது தெரியவந்தது.
சந்தேக மரணம்
மற்றொரு அறையில் பாலமுருகனும், பூஜை அறையில் இளைய மகன் லிங்கேஷ்குமாரும் இறந்த நிலையில் துாக்கில் தொங்கியதும் தெரியவந்தது. நான்கு பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது பற்றி சந்தேக மரணம் என, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், 'ஸ்கேன் சென்டர்' தொழிலை விரிவுப்படுத்த, 20க்கும் மேற்பட்ட வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், நண்பர்கள், உறவினர்கள் என, பலரிடம் பாலமுருகன், 5.80 கோடி ரூபாய் வரை கடன் வாங்கி உள்ளார். இதற்கு வட்டி மற்றும் மாத தவணையாக, ஆறு லட்சம் ரூபாய் வரை செலுத்தி வந்துள்ளார்.
கடனை திருப்பி செலுத்த முடியாமல், பாலமுருகன் மன உளைச்சலில் இருந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள், தினமும் வீட்டிற்கு வந்து சத்தம் போட்டதால் விரக்தியில் குடும்பத்துடன் தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. பாலமுருகன், யார் யாரிடம் கடன் வாங்கி உள்ளார் என்ற விபரத்தையும் எழுதி வைத்துள்ளார்.
இரண்டு மகன்களுக்கும், பாலமுருகன் அறுவை சிகிச்சை செய்யும் வலி தெரியாமல் இருக்க, மயக்க மருந்து கொடுத்திருந்தாரா அல்லது அவர்களை கொலை செய்தபின் தற்கொலை என்பது போல, மின்விசிறியில் தொங்க விட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் இறந்த சம்பவம், அண்ணா நகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.