ஆலோசகர்கள் சொல் கேட்டு அரசு நிர்வாகம் செயல்படுவதா? தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு
ஆலோசகர்கள் சொல் கேட்டு அரசு நிர்வாகம் செயல்படுவதா? தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு
ADDED : ஆக 27, 2024 06:28 AM
சென்னை: 'அரசு துறைகளில் ஆலோசகர்கள் நியமனங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும்' என, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தின் நிர்வாகிகள், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
தி.மு.க., அரசு பொறுப்பேற்று, 40 மாதங்கள் கடந்து விட்டன. ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், அரசு துறைகளில் ஆலோசகர்கள் நியமனங்களை தொடர்ந்து செய்து வருகிறது.
ஆரம்பத்தில் சில துறைகளில் மட்டுமே இருந்த ஆலோசகர்கள் நியமனம், தற்போது அனைத்து துறைகளிலும் புற்றீசல் போல பல்கி பெருகிவிட்டன.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், இவ்வாறான நியமனங்கள் இங்கொன்றும், அங்கொன்றுமாக இருந்தன. பெரும்பாலும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்.
தற்போது, ஆலோசகர்களின் நியமனங்கள், எந்தவித வரைமுறையுமின்றி செய்யப்படுகின்றன. அவர்களின் ஊதிய நிர்ணயத்திற்கு, எந்த வழிகாட்டுதலும் பின்பற்றப்படுவதில்லை.
அரசு பணியாளர்களின் முக்கியத்துவத்தையும், திறமையையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆலோசகர்கள் வழியே அரசு நிர்வாகத்தை நடத்துவது ஏற்புடையதல்ல.
களத்தில் நின்று, மக்களோடு மக்களாக, சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பணியாளர்களின் உழைப்பை புறந்தள்ளிவிட்டு, ஆலோசகர்களின் அறிவுரைப்படி, அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பது, சமூக நீதிக்கு எதிரானது.
மத்திய அரசு இணை செயலர், துணை செயலர், இயக்குனர் நிலையில், 45 பணியிடங்களை சமூக நீதிக்கு எதிராக நிரப்ப முயற்சித்த போது, தமிழக அரசு அதை எதிர்த்து குரல் கொடுத்து தடுத்தது.
ஆனால், மாநில அரசில் எந்தவித சலனமுமின்றி, ஆலோசகர்கள் நியமனங்களை பன்மடங்கு அதிகரித்திருப்பது, திராவிட மாடலுக்கு எதிரான நடவடிக்கை.
தமிழக அரசில், 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பாமல் அரசு நிர்வாகத்தை நடத்த, ஆலோசகர்கள் நியமனம் மறைமுகமாக உதவி கொண்டிருக்கிறது.
இது நீடித்தால், இளைய சமூகத்தின் அரசு வேலை கனவை சீரழித்து விடும். ஆலோசகர்கள் நியமிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.