சீமான் வீட்டில் போலீஸ் ஒட்டிய 'சம்மன்' கிழிப்பு வீட்டு பணியாளர், முன்னாள் ராணுவ வீரர் கைது
சீமான் வீட்டில் போலீஸ் ஒட்டிய 'சம்மன்' கிழிப்பு வீட்டு பணியாளர், முன்னாள் ராணுவ வீரர் கைது
ADDED : பிப் 27, 2025 11:53 PM

சென்னை:நடிகை விஜயலட்சமி அளித்த பாலியல் புகாரில், விசாரணைக்கு ஆஜராகுமாறு, சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய, 'சம்மன்' கிழிக்கப்பட்ட விவகாரத்தில், வீட்டு பணியாளர், முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த, 2011, ஜூன் மாதம், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருமண ஆசை காட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாக, விஜயலட்சுமி புகார் அளித்தார். சீமானால் ஏழுமுறை கட்டாயக் கருக் கலைப்புச் செய்யப்பட்டு, உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில், 12 வாரங்களுக்குள் போலீசார் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனால், வளசரவாக்கம் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு சென்று, விஜயலட்சுமியிடம் விரிவான விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்; 'வீடியோ' பதிவும் செய்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, பிப்., 27, காலை, 11:00 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என, சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்; நேற்று ஆஜராகவில்லை. சீமானின் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பின், சங்கர் கூறியதாவது:
நடிகை விஜயலட்சுமி, ஏற்கனவே அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக, இரண்டு முறை எழுத்துப்பூர்வமாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடிதம் அளித்துள்ளார்.
எனினும், 2023ல், போலீசாரால் சம்மன் கொடுக்கப்பட்டு, சீமானிடம், மூன்று மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.
தற்போது, சம்மன் வருவதற்கு முன்பாகவே, கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒப்புக்கொண்டதால், சீமானால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை.
அத்துடன், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்துள்ளார். எனவே, போலீசாரின் இந்த விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கும்படி எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சம்மன் கிழிப்பால் சண்டை
விசாரணைக்கு ஆஜராகாததால், வளசரவாக்கம் போலீசார், சென்னை நீலாங்கரையில் உள்ள, சீமான் வீட்டின் கதவில் மீண்டும், 'சம்மன்' ஒட்டினர். அதில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.
அதில், 'இவ்வழக்கு சரியான முறையில் நிறைவடைய, புலன் விசாரணைக்கு தேவையான எந்த தகவலையும் மறைக்காமல், அனைத்து உண்மைகளையும் வெளியிடுவீர்கள்; விசாரணைக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆவணங்களை சமர்பிப்பீர்கள்; இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்ய ஒத்துழைப்பீர்கள் என, நம்புகிறோம்.
'நீங்கள் இன்று காலை, 11:00 மணிக்கு, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.
போலீசார், இந்த சம்மன் குறித்து, சீமான் வீட்டு காவலாளியான, முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜிடம் தெரிவித்து விட்டுதான் கதவில் ஒட்டினர். அப்போது, நீலாங்கரை போலீசாரும் உடன் இருந்தனர்.
அவர்கள் சம்மன் ஒட்டிச் சென்ற சில நிமிடங்களில், சீமான் வீட்டுப் பணியாளர் சுபாகர் ஓடி வந்தார். கதவுக்குப் பின்னால், சீமான் மனைவி கயல்விழி இருந்தார். அவரிடம் கூறிவிட்டு, சம்மனை சுபாகர் கிழித்தார். அவருக்கு பக்கத்தில் அமல்ராஜ் இருந்தார்.
சம்மன் கிழிக்கப்படும் தகவல் அறிந்து, நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையில் போலீசார் ஓடி வந்தனர்.
இவர்களில், சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரரை, அமல்ராஜ் தடுத்தார். இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, பிரவீன் ராஜேஷ் உள்ளே புகுந்து, அமல்ராஜை பிடிக்க முயன்றார்; அதில், அமுல்ராஜின் சட்டை கிழிந்தது.
பின், அவரை போலீசார், 'தரதர'வென இழுத்துச் சென்று, வாகனத்தில் ஏற்றினர். அப்போது, 'நான் முன்னாள் ராணுவ வீரர்' என, அவர் கூறினார். 'யாரா இருந்தா என்ன... அவனை உள்ளே தள்ளுங்க' என, மற்ற போலீசாருக்கு பிரவீன் ராஜேஷ் உத்தரவிட்டார்.
அப்போது, அமல்ராஜ், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துள்ளார். அதை போலீசார் பிடுங்கிக் கொண்டனர். பின், அமல்ராஜ், சுபாகர் ஆகியோரை, நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அமல்ராஜ், தன் பாதுகாப்பிற்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார்.
ஆனால், அதை தன் பணிக்கு பயன்படுத்தியது சட்டப்படி குற்றம். இதனால், 20 குண்டுகளுடன், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, ஆயுத தடுப்பு உட்பட, நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் அமல்ராஜ், சுபாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீமான் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலீசாரின் புரிதலில் தவறு
போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, தன்னிடம் துப்பாக்கி இருக்கிறது என, என் கணவர் அதை எடுத்து போலீசாரிடம் கொடுக்க முயன்றுள்ளார். இதை போலீசார் தவறாக புரிந்து கொண்டனர்.என் கணவரை பார்க்க அனுமதி அளித்தனர். போலீசாரின் தரப்பில் உள்ள நியாயத்தை தெரிவித்தனர். நாட்டை காக்கும் பணியில் இருந்த என் கணவர், சட்டத்தை மதிக்கக்கூடியவர். எங்கள் தரப்பு நியாயத்தை போலீசாரிடம் தெரிவித்தோம். இனி சட்ட ரீதியாக பார்த்துக் கொள்வோம்.
- அமுல்ராஜ் மனைவி மஞ்சுளா
'சாரி சார்!'
அமல்ராஜை போலீஸ் வாகனத்தில் ஏற்றும்போதே, சீமான் மனைவி பின்தொடர்ந்து சென்றார். இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷிடம், 'சாரி சார்... அமல்ராஜை விட்டு விடுங்கள்' எனக் கெஞ்சினார்.
இன்ஸ்பெக்டர் கோபமாக, 'என்னங்க சாரி, நீங்க யார்... விசாரணைக்கு வந்த போலீசாரிடம் இப்படி தான் நடந்து கொள்வீர்களா?' எனக் கேட்டார்.
எத்தனை முறை கொடுப்பர்?
ஓசூரில் சீமான் அளித்த பேட்டி: விஜயலட்சுமி என் மீது கொடுத்த புகார் தொடர்பாக, ஏற்கனவே ஒரு அழைப்பாணை கொடுத்தார்கள். எத்தனை முறை கொடுப்பார்கள்?
போலீஸ் விசாரணைக்கு வருகிறேன் என கூறி விட்டேன். அப்படி இருக்க, என் வீட்டுக்கு சென்று ஏன் நோட்டீஸ் ஒட்ட வேண்டும்.
தி.மு.க., ஆட்சிக்கு வரும்போதெல்லாம், என் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு விசாரணைக்கு வரும். ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியில் இருந்த போது இப்படியெல்லாம் நடக்கவில்லை. தேர்தல் வரும்போதெல்லாம் இப்படிப்பட்ட நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.