ADDED : ஏப் 16, 2024 09:48 PM
சென்னை:'இறுதிக்கட்ட அன்பளிப்புக்கு இடமளித்து ஏமாற வேண்டாம்' என, வாக்காளர்களுக்கு, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
பிரதமர் மோடியை, மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் அமர வைப்பதன் வழியாக, உலக நாடுகள் மத்தியில், இந்தியாவை வலிமையான நாடாக மாற்றவும், பொருளாதார ரீதியாக நம் நாடு முன்னேற வழிவகுக்கவும் உதவும் என்பதை, மக்கள் உணர்ந்துள்ளனர்.
தேனி தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றும் முனைப்பில், தொலை நோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்தி, நம் மாநில உரிமை மற்றும் விவசாயிகள் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நம் ஒவ்வொருவரின் ஓட்டும், நம் தொகுதி வளர்ச்சி மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு அளிக்கக் கூடிய பாதுகாப்பு என்பதை, ஒவ்வொருவரும் உணர வேண்டும். உங்களிடமே சுரண்டி, இறுதிகட்ட அன்பளிப்பு என்ற பெயரில் உங்களுக்கே, 300, 500 என கொடுக்க முயற்சிக்கும் சூழ்ச்சியை, ஆளுங்கட்சியினரும், ஆண்ட கட்சியினரும் முன்னெடுத்து செய்து வருகின்றனர். அவற்றுக்கு இடமளித்து ஏமாற வேண்டாம்.
இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.

