நல்ல திட்டங்களை தடுத்துவிட்டு எங்கள் மீது பழிபோடாதீர்கள்! தி.மு.க., அரசுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
நல்ல திட்டங்களை தடுத்துவிட்டு எங்கள் மீது பழிபோடாதீர்கள்! தி.மு.க., அரசுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
ADDED : செப் 13, 2024 06:25 AM

கோவை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி
அமைச்சர்கள் குழு, ஏறக்குறைய ஓராண்டு காலம், ஒவ்வொரு பொருளாக, தனித்தனியாக, மிக விரிவாக ஆய்வு செய்து, எவ்வளவு வரி விதிக்கலாம் என பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் தான் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.ஜி.எஸ்.டி.,யால் மக்களுக்கு சுமை இல்லாமல் இருக்க எவ்வளவு முயற்சி செய்ய முடியுமோ, அவ்வளவு முயற்சியை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
மாநிலத்துக்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான முதல்வர் ஸ்டாலின்முயற்சிகளைவரவேற்கிறேன்.புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது, உறுதி கொடுப்பது இவை நடக்கும். எந்த அளவுக்கு நிறைவேறுகிறது என்பதைப் பிறகு பார்க்கலாம்.
ஏழைகள் பயன்படுத்தும் ஜன்தன் கணக்கு, நடப்புக் கணக்கு, சேமிப்புக் கணக்கு இது எதற்கும், குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படாது. அவ்வாறு இருப்பின் புகார் தெரிவிக்கலாம்.
விஸ்வகர்மா திட்டத்திற்கு பலமாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. விஸ்வகர்மா என்பது குலத்தொழில் அல்ல. யாராக இருந்தாலும், கருவிகளை வைத்து தொழில் செய்தால் அவர் விஸ்வகர்மாதான். முடிதிருத்துபவர் முதல் மேஸ்திரி வரை 18 தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதை ஜாதியுடன் தொடர்புபடுத்தக்கூடாது.மத்திய அரசின் வாயிலாக நல்ல திட்டங்கள் வந்துவிடுகிறதே என ஒவ்வொன்றுக்கும் தடை ஏற்படுத்துகின்றனர்.
திராவிட அரசியல் என்ற பெயரில், குலத்தொழிலுக்கு எதிரானவர்கள், ஹிந்திக்கு எதிரானவர்கள், ஜாதிக்கு எதிரானவர்கள் நாங்கள் என்கின்றனர். உண்மையில் நடப்பது என்ன?
பள்ளியில் குழந்தைகளை வெட்டிக் கொல்கின்றனர். சாலையில் ஜாதி மோதல் நடக்கிறது. குடிநீரில் மலம் கலக்கின்றனர்; சமத்துவம் பேசுபவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஹிந்தி பேசித் தான் ஆக வேண்டும் என நான் சொல்லவில்லை. நான் இன்றும் புறநானுாறு, திருக்குறள் படிக்கிறேன்.
ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, நல்ல திட்டம், ஏழைகளுக்கு உதவும் திட்டம் வந்தால் ஜாதி, ஹிந்தி, ஆரிய ஆதிக்கம் என அதைத் தடுக்கின்றனர்.
கேந்திரிய வித்யாலயா சேர்க்கைக்கு என்னிடம் எத்தனை எம்.பி.,க்கள் அனுமதி கேட்டு வந்துள்ளனர். ஆனால், வெளியில் மக்களை ஏமாற்ற பாசாங்கு செய்கின்றனர்.
சென்னை மெட்ரோ 2ம் கட்டத்துக்குகடன் தொகையை மத்திய அரசு பல்வேறு கால கட்டங்கலில், ஏ.ஐ.ஐ.பி., என்.டி.பி., ஏ.டி.பி., ஜைக்கா உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேசி, 21 ஆயிரத்து 560 கோடி ரூபாய் பெற்றுத் தந்துள்ளது. மாநில அரசின் திட்டம் என ஒப்புக்கொண்டு செயல்படுத்தத் தொடங்கிவிட்டு, கடனைச் சமாளிக்க முடியவில்லை எனக்கூறி, வெறும் 5,880 கோடி மட்டும் செலவழித்து நிறுத்தியுள்ளனர். மாநில அரசால் முடியாவிட்டால் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறோம். அதை விட்டு எங்கள் மீது பழிபோடக்கூடாது.