' நில வழிகாட்டி மதிப்புகளை அவசர கதியில் உயர்த்தாதீங்க '
' நில வழிகாட்டி மதிப்புகளை அவசர கதியில் உயர்த்தாதீங்க '
ADDED : மே 13, 2024 03:52 AM
சென்னை : 'நில வழிகாட்டி மதிப்புகளை அவசர கதியில் உயர்த்தாமல், போதிய அவகாசம் அளித்து, மாவட்ட, மையக்குழு கூட்டங்களை நடத்தி நிர்ணயிக்க வேண்டும்' என, சார் - பதிவாளர்கள் சங்கம், பதிவுத்துறை தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளது.
தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்புகளை சீரமைக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வாசுகி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு மண்டல வாரியாக வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து, புதிய பரிந்துரைகளை தயாரித்து வருகிறது.
கடிதம்
இந்நிலையில், தமிழக சார் பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் மு.மகேஷ், பொதுச்செயலர் தா. மணிராஜ் ஆகியோர், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
நில வழிகாட்டி மதிப்புகளில் காணப்படும் குளறுபடிகளை நீக்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. லட்சக்கணக்கான சர்வே எண்கள், பல்லாயிரக்கணக்கான தெருக்கள் உள்ள நிலையில், அவசர கதியில் வழிகாட்டி மதிப்பு மாற்றம் செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.
பதிவுத்துறையில் காலி பணியிடங்கள் அதிகரித்துள்ள நிலையில், சார் - பதிவாளர்களுக்கு பணி சுமையும் அதிகரித்துள்ளது.
பாதிக்கப்படுவர்
இதில், சந்தை நிலவரத்தை கணக்கில் கொள்ளாமல், அதிகபட்ச மதிப்புகளை நிர்ணயித்தால், மக்கள் பாதிக்கப்படுவர். பதிவுக்கு வரும் பத்திரங்கள் எண்ணிக்கை குறையும்; ரியல் எஸ்டேட் துறையும் பாதிக்கப்படும்; துறைக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் பாதிக்கப்படும்.
எனவே, மாவட்ட, மையக்குழு கூட்டங்கள் நடத்தி, உரிய பணியாளர்களை ஒதுக்கி, போதிய அவகாசம் அளித்து, பிற துறைகள் ஒத்துழைப்புடன், வழிகாட்டி மதிப்புகளை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.