பொதுத்தேர்வு மதிப்பெண் கேட்டு பிள்ளைகளை 'டார்ச்சர்' பண்ணாதீங்க... இது முடிவல்ல... தொடக்கம்
பொதுத்தேர்வு மதிப்பெண் கேட்டு பிள்ளைகளை 'டார்ச்சர்' பண்ணாதீங்க... இது முடிவல்ல... தொடக்கம்
ADDED : மே 07, 2024 06:25 AM

மதுரை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அடுத்து மே 10 ல் பத்தாம் வகுப்பு, 17 ல் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும். தேர்வு முடிவு வெளியான உடனே பக்கத்து வீட்டினர், உறவுகள் எல்லோருமே மதிப்பெண் கேட்டு தொந்தரவு செய்திருப்பீர்கள். செய்வீர்கள். இது அந்த குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்கும் தாங்க முடியாத மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்க வேண்டும் என்கிறார் மதுரை மனநல டாக்டர் கவிதா பென்.
அவர் கூறியதாவது: வெற்றி, தோல்வி எப்போது வேண்டுமானாலும் வரும். முதல் தோல்வியில் வாழ்க்கை முடிந்து விட்டதென நினைக்கக்கூடாது. தேர்விலும், வாழ்விலும் இரண்டாவது வாய்ப்பு எப்போதுமே உண்டு. முடிவென்று கிடையாது.
வேறொரு வாய்ப்பின் தொடக்கமாகவும் இருக்கலாம். தேர்வில் எதிர்பார்த்ததை விட மதிப்பெண் குறைந்தால் பிடித்தமான வேறு பாடத்தை பிள்ளைகள் தேர்ந்தெடுக்க பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.
மதிப்பெண் குறைந்தால் தப்பில்லை; நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை பிள்ளைகளுக்கு உருவாக்கித் தரவேண்டும். பிள்ளை தான் முக்கியம் என்பதை உணர்த்த வேண்டும்.
அடிப்பதோ, திட்டுவதோ, பிறரின் மதிப்பெண்ணுடன் ஒப்பிடுவதோ தவறு. மதிப்பெண் குறைந்த நிலையிலோ அல்லது தேர்வில் தோற்றாலோ தொடர்ந்து சோகத்தில் துாங்காமல் இருந்தால் மனநல ஆலோசனை அவசியம். தயங்காமல் பிள்ளையை அழைத்து பேச வேண்டும்.
ரிசல்ட் வரும் நாளில் பிள்ளையுடன் யாராவது கண்டிப்பாக துணையிருக்க வேண்டும். ஆண் பிள்ளைகளாக இருந்தால் போதையின் பாதையில் சென்று விடாமல் கவனமாக கண்காணிக்க வேண்டும்.
பிளஸ் 2 விற்கு பின் மருத்துவம், பொறியியல் மட்டும் படிப்பில்லை. பிடிக்காத பாடத்தை கட்டாயப்படுத்தக்கூடாது. தேவைக்கு மேல் அதிகமாக பணம் செலவழித்து விட்டு பிள்ளைகள் படிக்கவில்லை, குறைந்த மதிப்பெண்ணுக்கு விரும்பிய சீட் கிடைக்கவில்லை என பெற்றோர்கள் வேதனைப்படுகின்றனர்.
இதனால் பாதிக்கப்படுவது உங்கள் பிள்ளைகள் தான். மதிப்பெண் குறைந்தால் பெற்றோரும் மனஉளைச்சலுக்கு ஆளாவதால் பிள்ளைகளின் பாதிப்பும் பயமும் இருமடங்காகி விடும். மருத்துவப்படிப்பு கிடைக்காவிட்டால் மருத்துவத்தோடு தொடர்புடைய பிற துறைகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும்.
வருத்தப்படக்கூடாது
அதிக பணம் செலவழித்து மதிப்பெண் வரவில்லை என பெற்றோர் வருத்தப்படக்கூடாது. இது பிசினஸ் கிடையாது. பிள்ளைகளின் எதிர்காலம். தேர்வு நேரத்தில் பிள்ளைகளின் மனநிலை, உடல்நிலை, தேர்வுத்தாள் எல்லாம் சேர்ந்து தான் மதிப்பெண்ணை நிர்ணயிக்கும்.
பக்கத்து வீட்டினர், உறவுகள் ஒவ்வொருவரும் மதிப்பெண்ணை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. நீங்கள் அமைதியாக இருந்தாலே பிள்ளைகளின் வாழ்க்கை வீணாகாது. இவ்வாறு கூறினார்.
இது கடைசி கட்டம் அல்ல
மதுரை மனநல ஆலோசகர் முகில் கூறியதாவது: தேர்வில் மதிப்பெண் பெறுவது தான் வாழ்வின் கடைசி கட்டம் என்ற மனநிலையை பெற்றோர் பிள்ளைகளின் மீது உருவாக்கக்கூடாது. தான் படிக்க நினைத்த பாடத்தை பிள்ளைகள் படிக்கவேண்டும் என்ற நினைப்பை முதலில் மாற்றுங்கள்.
தாங்கள் படித்த பாடத்தை எடுத்து படிக்கச் சொல்லி சொந்தங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. இதனால் பிள்ளைகளுக்கு எப்போதுமே பொதுத்தேர்வின் போது பயமும் பதட்டமும் ஏற்படும். மற்றவர்களோடு மதிப்பெண்ணை ஒப்பிட்டு தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ள ஆரம்பிப்பர்.
நன்றாக படிக்கும் பிள்ளைகள் கூட 'பெற்றோர் எதிர்பார்த்த மதிப்பெண் எடுக்கவில்லை, அவர்களை திருப்திப்படுத்தவில்லை' என தன்னைப் பற்றிய சுயமதிப்பீடு, நம்பிக்கை உடைந்து மனஅழுத்தத்திற்கு ஆளாவர்.
எவ்வளவு நன்றாக படித்தாலும் மதிப்பெண் எடுத்தாலும் மனநிறைவிருக்காது. எனவே மதிப்பெண் குறைந்தால் அடுத்தது என்ன என்று யோசிக்க வேண்டும். இந்த மதிப்பெண்ணுக்கு என்ன வாய்ப்புகள் உள்ளதென கண்டறிந்து அதை தேடித்தர வேண்டும்.
சிலர் பிடித்தமான பாடம் என தேர்ந்தெடுத்து தொடர்ந்து படிக்க முடியாமல் பாதியில் வெளியேறுவதும் நடக்கிறது. பொறியியல், மருத்துவம் தாண்டிய படிப்புகள் உள்ளதை குறிப்பிட்டு விருப்பப்பட்ட படிப்பை தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் பணத்தேவையா, வளர்ச்சியா, மகிழ்ச்சியா எதை நோக்கி செல்ல வேண்டும் என முடிவெடுக்கின்றனரோ அதற்கேற்ற பாடத்திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பிள்ளைகள் முடிவெடுத்த பின் பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும்.
பிளஸ் 2வில் எடுத்த பாடப்பிரிவை தான் கல்லுாரியிலும் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அறிவியல் பாடம் எடுத்த மாணவர்கள் மீடியா தொழில் சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்தாலும் தவறில்லை என்றார்.